×

ஹீரோ

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன் , ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ஹீரோ'.

போலி மார்க்‌ஷீட் உருவாக்கிக் கொடுப்பது, நினைக்கும் கல்லூரியில் காசு வாங்கிக்கொண்டு சீட்டு வாங்கிக் கொடுப்பதுதான் சக்திவேல்(சிவகார்த்திகேயன்)  மற்றும் இன்க் (எ) இன்பராஜ் வேலை. இடையில் மீரா(கல்யாணி பிரியதர்ஷன்) மீது காதல் மலர நீ ஏமாற்றாமல் ஒருமுறையேனும் நேர்மையாக ஒரு ஏழை சிறுமிக்கு சீட்டு வாங்கிக் கொடு என்கிறார். முதல் முறையாக நேர்மையாக முயற்சி செய்யத் துவங்கினால் ஆரம்பிக்கிறது அத்தனை பிரச்னைகளும். பிரச்னை யாரால் எதனால் என்பதற்கு சமூக அக்கறையுடன் விரிகிறது படம்.

காதல் + காமெடி இந்தக் களத்திலேயே பயணம் செய்துகொண்டிருந்த சிவகார்த்திகேயன் தற்போது சமூகத்தைக் காப்பாற்றும் ஹீரோ அல்ல சூப்பர் ஹீரோ ஆகி வசனம் பேசுகிறார், மாஸ்க் மாட்டி மாஸ் காட்டுகிறார். எல்லாம் சரி இந்த சமூகக் கதைக்கு ஏன் இவ்வளவு மெனெக்கெடல் .

கதையே அதீத ஆழமாக சமூக சிந்தைனையுடன் செயல்படுகையில் மக்களின் மக்களாக நின்றே சிவகார்த்திகேயன் போராடியிருக்கலாம் .

'ஜென்டில்மேன்' பாத்திரத்தின் நீட்சியாக அர்ஜுன் பாத்திரம் வேறு ஒரு களத்தில் பயணித்து சில இடங்களில் இவர் தான் ஹீரோவா என்ற சந்தேகம் கூட எழுகிறது.

ரோபோ ஷங்கர் , வந்தார் ,  இடையில் எங்கே போனார் என்றே தெரியவில்லை , இதே பாணிதான் ஹீரோயின் கல்யாணியும். மொத்தத்தில் அர்ஜுனின் கதைக்குள் சிவகார்த்திகேயன் மட்டுமே ஹீரோவாக தெரியவைக்கப்பட்டிருக்கிறார்.

கல்வி, இளைஞர்களின் கண்டுபிடிப்புகள் அதில் அரசியல் என கொஞ்சம் ஆழமான நிஜமான அரசியலை பேசும் கதைக்கு மித்ரனின் நீண்ட உழைப்புத் தெரிகிறது.

ஆக்‌ஷன் காட்சிகளில் ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அருமை. பாடல்கள் நமக்கு நாமே யுவன் ஷங்கர் ராஜாதான் என திரும்ப திரும்ப சொல்லிக்கொள்ள வேண்டியுள்ளது. பெரிதாக மனதில் நிற்கவில்லை. பின்னணி அருமை.

மொத்தத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்காக அவருடைய மாஸ் காட்சிகள் ஒருபக்கம் இருக்கட்டும் என நினைத்துக்கொண்டு படம் சொல்லும் கருத்தை பொதுவான பார்வையாளர்களாக ரசிக்கலாம்.

Tags :
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...