×

குடிநீர் தட்டுப்பாட்டால் மலைக்கிராம மக்கள் அவதி

குன்னூர்: குன்னூர் அருகே மேல் குரங்கு மேடு பழங்குடியின கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாததால் தினசரி ஒரு கிலோ மீட்டர் சென்று தண்ணீரை சுமந்து கொண்டு வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் ஏழு கிராமங்களில் வசிக்கும் குரும்பர் பழங்குடியின மக்கள் இது நாள் வரை மின்சாரம் என்பதே அறியாமல் வாழ்ந்து வந்தனர். ஜோகி கோம்பை கிராமத்தில் 10 குடும்பம், செங்கல் கோம்பை கிராமத்தில் 15 குடும்பம், மல்லிக்கொரை கிராமத்தில் 8 குடும்பம், மேல்குரங்கு மேடு கிராமத்தில் 5 குடும்பம், அணில் காடு கிராமத்தில் 30 குடும்பம் என நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இது நாள் வரை மின்சாரம் என்பதே அறியாமல் வாழ்ந்து வந்தனர்.  தமிழக அரசின் நடவடிக்கை மூலம் இந்த பழங்குடியின கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக அணில்காடு கிராமத்திற்கு மின்சாரம் வழங்கியுள்ளனர். அதே போல் ஒவ்வொரு பழங்குடியின கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பில்லூர் மட்டம் அருகே அமைந்துள்ளது மேல் குரங்கு மேடு பகுதி. சாலையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவு தேயிலை தோட்டத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கு குரும்பர் பழங்குடியின மக்கள் ஐந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இயற்கையில் கிடைக்கும் மண் மற்றும் சுண்ணாம்பு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அவர்களுக்கு உரித்தான முறையில் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். விவசாயத்தை கைவிட்டு தற்போது தேயிலை தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். மின்சாரம் என்பதே அறியாமல் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்போது மின்இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுத்தாலும் முழுமையாக பணிகள் முடியாமல் கிடப்பில் உள்ளது. அடிப்படை தேவைகளான சாலைவசதி,குடிநீர்வசதி,கழிப்பிட வசதியின்றி தவிக்கும் இக்கிராம மக்கள் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு ஒரு கி.மீ தொலைவு நடந்து சென்று தலையில் சுமந்து கொண்டு தான் வர வேண்டும். தற்போது மழை காலம் என்பதால் குடிநீர் கொண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர். வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் மாலை ஆறு மணிக்கு மேல் அங்குள்ள பழங்குடியின மக்கள் யாரும் வெளியே வருவதில்லை. தகவல் தொழில்நுட்பம் ஏதும் இல்லாததால்  அவசர காலங்களில் ஒரு தேவை என்றால் கூட உடனடியாக வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி என்பதால் குடிநீர் வசதி செய்து தரக் கோரி பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.  மண் வீடுகள் என்பதால் பெருமழை காலங்களில் வீட்டின் சுவர் இடிந்து விடுவதாக தெரிவிக்கும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு மாற்று வீடுகள் இதே பகுதியில் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காலம் தாழ்த்தாமல் மின்இணைப்பினை உடனடியாக வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post குடிநீர் தட்டுப்பாட்டால் மலைக்கிராம மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Mel Kurangu Medu ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா...