×

வேலூர் பெருமுகை பாலாற்று கரையோரத்தையும் விட்டு வைக்கவில்லை அரசு உத்தரவை மீறி அளவுக்கு அதிகமாக அதிகாரிகள் மணல் எடுப்பதாக புகார்

*இயந்திரங்களை வைத்து பனைமரங்களை அடியோடு சாய்த்த அவலம்வேலூர் : வேலூர் பெருமுகை பாலாற்றில் கரையோரம் அரசின் உத்தரவை பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி இயந்திரங்களை வைத்து மணல் எடுப்பதுடன், பனைமரங்களை அடியோடு சாய்த்துள்ள சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காட்பாடி அடுத்த அரும்பருதி பாலாற்றில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மணல் குவாரி இயங்க சுற்று சூழல் துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து அங்கிருந்து டிராக்டர்கள் மூலம் எடுக்கப்படும் மணல் பெருமுகை பகுதியில் உள்ள மணல் விற்பனை நிலையத்திற்கு கொண்டு வந்து சேமித்து வைக்கப்பட்டு வருகிறது.  ஒரு யூனிட் மணல் ₹3,150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்களுக்கும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்களுக்கும் மணல் விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்களுக்கு மணல் தேவைப்பட்டால் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு ஆண்டிற்குள் குவாரியில் மொத்தம் 4,9000 கனமீட்டர் அளவு மணல் எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு 100 யூனிட் மணல் அள்ள அனுமதிக்கப்படும். இந்த மணல் கைகளால் மட்டுமே அள்ளப்படும். நாளொன்றுக்கு 150 லோடு மணல் விற்கப்படும் என்று பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் முறைகேடுகள் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் இருந்து அரசு உத்தரவை மீறி தற்போது வேறு இடமான பெருமுகை கிராமத்தையொட்டி பாலாற்று பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் மணல் எடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பாலாற்று மைய பகுதியில் மணல் அள்ளாமல் பெருமுகை கிராமத்தை ஒட்டி உள்ள கரையோரம் அளவுக்கு அதிகமான மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பாலாற்றின் கரையோரம் இருந்த ஏராளமான பனைமரங்களை பொக்லைன் இயந்திரங்களை வைத்து வேரோடு பெயர்த்து எடுத்து வீசி உள்ளனர். சுடுகாட்டு பகுதியை கூட விட்டுவைக்காமல் அதிகாரிகள் அத்துமீறும் சம்பவம் அரங்கேறி வருகிறது.அரசின் உத்தரவை மீறி ெபாக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் எடுத்து வருவதாகவும், தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்படுவதாகவும் இதை தமிழக அரசு உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து பெருமுகை கிராம பொதுமக்கள் கூறியதாவது:பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்த இடத்தை விட்டு தற்போது பெருமுகை கிராமத்தை ஒட்டி உள்ள பாலாற்றில் மணல் அள்ளுகின்றனர். அந்த வழியாக செல்லும் கூட்டுகுடிநீர் பைப் லைன் சேதம் அடையும் வகையில் அளவுக்கு அதிகமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் மணல் கொண்டு செல்லப்படுகிறது. சுடுகாட்டையும் விட்டுவைக்காமல் அதிகாரிகள் அத்துமீறி எடுத்து வருகின்றனர். இயந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர். எனவே இதை உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஆய்வு செய்து குவாரியை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.நீர்நிலை கரைகளை பாதுகாக்கும் பனைமரங்கள்வறண்ட நிலத்திலும் வளரும் தாவரமான பனை மரம், தமிழகத்தின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த பனை மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவைச் சந்தித்து வருகின்றன. அதன் பயன்களை உணர்ந்தவர்கள், அந்த மரத்தைப் போற்றிப் பாதுகாக்கின்றனர். பனை மரங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தி, புதிதாக பனை மரங்களை நடவு செய்ய தற்போது தமிழக அரசும், பல்வேறு அமைப்புகளும் முயற்சித்து வருகின்றன. குறிப்பாக பண்டைய காலத்தில் நீர்நிலைகளின் கரைகளில் பனை மரங்களைத்தான் நட்டுவைத்தார்கள்.இது வறண்ட நிலத்திலும் வளரும் தன்மையுடையது. பனையின் சல்லி வேர்கள் கரைகளை இறுக வைப்பதால், குளக்கரைக்கு பாதுகாப்பும் அதிகம். ஆனால், இன்றைய சூழலில் நீர்நிலைகளும் அழிந்து, அதைப் பாதுகாத்த பனைகளும் அழிந்து வருகிறது. ஒரு பக்கம் பனைமரங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் சூழ்நிலையில், இங்கு பாலாற்று கரையோரம் உள்ள பனைமரங்களை அதிகாரிகளே இப்படி அழித்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.அதிகாரிகள் ஆய்வு எப்போது? பெருமுகை பாலாற்றில் விதிமீறி மணல் அள்ளப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கடந்த வாரம் உத்தரவிட்டார். அதன்படி கனிமவளத்துறை உதவி இயக்குனர், வேலூர் ஆர்டிஓ, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆகியோர் அடங்கிய குழுவை நியமனம் செய்தார். இவர்கள் பெருமுகை பாலாற்று பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து, அனுமதிக்கப்பட்ட இடத்தை மீறி வேறு இடங்களில் மணல் அள்ளுகிறார்களா? பொதுமக்களுக்கு எந்தமாதிரியான பாதிப்பு ஏற்படுகிறது போன்றவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இன்னும் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடவில்லையாம். எப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள் என்று அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்….

The post வேலூர் பெருமுகை பாலாற்று கரையோரத்தையும் விட்டு வைக்கவில்லை அரசு உத்தரவை மீறி அளவுக்கு அதிகமாக அதிகாரிகள் மணல் எடுப்பதாக புகார் appeared first on Dinakaran.

Tags : Vellore Perumugai ,Avalamvelur ,Vellore Perumukai Palaat beach ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில்...