×

தொடர்மழையால் பட்டறையில் பாதுகாக்கப்பட்ட சின்னவெங்காயம் அழுக துவங்கின-உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

தொண்டாமுத்தூர் :   கோவை அருகே தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான தீத்திபாளையம்,  காளம்பாளையம், மாதம்பட்டி,ஆலாந்துறை,நரசிபுரம் உள்ளிட்ட பல்வேறு  கிராமங்களில் சொட்டுநீர்பாசன வசதியோடு ஆண்டு முழுவதும் 500 ஏக்கருக்கும்  மேற்பட்ட பரப்பளவில் சின்னவெங்காய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 75  நாள் பயிரான சின்னவெங்காயத்தின் அறுவடையின் போது போதிய விலை கிடைக்காவிடில்  அவற்றை விவசாயிகள் பட்டறை அமைத்து பாதுகாத்து உரிய விலை வரும்போது விற்று  வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  மழை நீடித்து வருவதால் பட்டறைகளுக்குள் மழைநீர் ஒழுகி சின்னவெங்காயம்  கெட்டு போக துவங்கி விட்டது. மழை காரணமாக சின்னவெங்காயம் விலை  சந்தையில் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையாகி வருகிறது. ஆனால்  வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து தரத்திற்கேற்றாற் போல கிலோ ரூ.25 முதல்  ரூ.50 வரை கொள்முதல் செய்கின்றனர்.தொடர் மழையால் வெங்காய பட்டறைகளில்  பூஞ்சாணம் பிடிப்பதால் விலை உயர்ந்த போதும் விவசாயிகளால் அதற்குரிய பலனை  அடைய முடியவில்லை. ஒரு சில பட்டறைகளில் பாதுகாத்து வைக்கப்பட்ட  சின்னவெங்காயம் அழுக துவங்கியதால் பாதி விலைக்கு வியாபாரிகள் கேட்பதாக  விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.இதே போல தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார  பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி  செடிகள் பூக்கின்ற நிலையில் இருந்த போது, தொடர் மழை காரணமாக பூக்கள்  அனைத்து உதிர்ந்து விட்டன. மேலும் வயலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தக்காளி  செடிகள் அழுகியதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  தொடர் மழை காரணமாக ஒரு சில தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த காலிபிளவர்  மற்றும் முட்ைடகோஸ் ஆகியனவும் அழுக துவங்கி உள்ளன.இதுகுறித்து  தீத்திப்பாளையம் விவசாயி பெரியசாமி கூறுகையில்: தொடர் மழையால் வெங்காய  விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே வேளாண்துறை அதிகாரிகள்  சேதமடைந்த வெங்காய பட்டறைகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு நஷ்டஈடு வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெயிலுக்கும்,மழைக்கும் தாக்கு  பிடிக்கின்ற அளவிற்கு வெங்காய விதைகளை வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து தர  வேண்டும் என்றார்….

The post தொடர்மழையால் பட்டறையில் பாதுகாக்கப்பட்ட சின்னவெங்காயம் அழுக துவங்கின-உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Thondamuthur ,Coimbatore ,Dithipalayam ,Kalampalayam ,Madhapatti ,Alandara ,Narasipuram ,
× RELATED அமோக வெற்றியை தந்த தேக்கு மிளகு கூட்டணி: சாதித்த பெண் விவசாயி நாகரத்தினம்!