×

தலைநிமிர்ந்த தமிழ்நாடு

சென்னையில் நடந்த ‘நாளையை நோக்கி இன்றே – தலை நிமிர்ந்த தமிழ்நாடு’ எனும் தொழில் வளர்ச்சி – 4.0 மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேச்சு, ஒவ்வொரு தமிழனையும் தலை நிமிர வைத்திருக்கிறது. பொருளாதார அளவில் மிகச்சிறந்த மாநிலமாக, உலகின் கவனத்தை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்கப் போகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன்மூலம் தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதில் மிக முக்கியமாக சென்னையில் கடந்த ஜூலை 4ம் தேதி நடந்த ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ எனும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.1,25,244 கோடி முதலீட்டில் சுமார் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போதே 17,654 பேர் வேலைவாய்ப்புகளை பெற்றிடும் வகையில் 21 திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுக்குள் சுமார் 2 லட்சம் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறும் வகையில், சுமார் 130க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மேலும், பல முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களும் தொழில்துறையில் வளர்ச்சி பெற பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். தென்மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காக, மதுரையில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பார்க் அமைக்கப்படுமென அறிவித்தார். இதன்மூலம் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் துறையில் தமிழகத்தின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை மற்ற மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள இந்தியாவில் எளிதாக தொழில் துவங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில், 14வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழில்துறையில் தமிழகம் நிகழ்த்தியது புரட்சி என்றே கூற வேண்டும். இந்த அரிய வளர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளே முக்கிய காரணமாகும். அதுமட்டுமின்றி ஏற்றுமதி துறையிலும் 3வது பெரிய மாநிலமாக தமிழகம் சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில் இருந்து ரூ.1.93 லட்சம் கோடி அளவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பெருகி வரும் முதலீடுகள் அடிப்படையில், விரைவில் தமிழகம் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் நாட்கள் வெகு தூரமில்லை. வரும் 2023ம் ஆண்டு இறுதிக்குள், உலக முதலீட்டாளர்கள் சந்திப்பை நிகழ்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் மேலும் அதிக முதலீடுகளை ஈர்க்க முடியும்; வரும் 2030ம் ஆண்டுக்குள் தமிழகம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்கு என்றும் நம்பிக்கையோடு கூறி வருகிறார். சீரான இடைவெளியில் தொழில்துறை சார்ந்த மாநாடுகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம், தமிழகம் விரைவில் பொருளாதார மேம்பாடு அடைவதோடு, இந்தியாவிலேயே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முதல் மாநிலமாக தமிழகம் திகழப்போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது….

The post தலைநிமிர்ந்த தமிழ்நாடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Industry Development - 4.0 ,Nadu ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...