×

நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்கள்...

ஒரு சில நட்சத்திரங்கள் ஏடாகூடமாக பேசி ரசிகர்களிடம் மூக்குடைபடுவது அவ்வப்போது நடக்கிறது. ஆனால் நடிகையின் மூக்கை ரசிகர் ஒருவர் நிஜத்திலேயே உடைத்த சம்பவம் நடந்துள்ளது. கண்ணடித்து பிரபலமான பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த ஒரு அடார் லவ் படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடித்தவர் நூரின் ஷெரிப். சமீபத்தில் இவர் கேரளாவில் ஒரு திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.

நூரின் வருவதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் அங்கு காத்திருந்தனர். மணிக்கணக்கில் காத்திருந்த நிலையில் நூரின் தாமதமாக வந்தார். உடனடியாக அவரது காரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவரைக்காணும் ஆவலில் நெருக்கித் தள்ளினர். கூட்ட நெரிசல் அதிகமான நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஒரு ரசிகரின் கை நூரின் மூக்கு மீது வேகமாக மோதியது.

வலி தாங்க முடியாமல் நூரின் மூக்கை பிடித்துக்கொண்டு துடித்தார். அவரது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. தர்மசங்கடத்தில் ஆழ்ந்த நூரின் வலியை பொறுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் கூறும்போது,’நிகழ்ச்சி அமைப்பாளர்கள் என்னை இந்த நேரத்துக்குத்தான் வரச் சொல்லியிருந்தார்கள். சரியான நேரத்துக்குத்தான் நான் வந்தேன். ரசிகர்கள் பதற்றம் அடையாமல் அமைதியாக இருங்கள்’ என கேட்டுக்கொண்டார் நூரின்.

Tags : Fans ,actress ,
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!