×

கைதி தமிழ் சினிமாவுக்கு ஒரு கண்திறப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட மிகச்சிலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'கைதி'. பல கோடி மதிப்பிலான போதைப்பொருளை கைப்பற்றும் பிஜோய் (நரேன்) மற்றும் அவரது காவல் படை குழு. போதைப்பொருளை காவல் நிலையத்தில் வைத்துவிட்டு உயரதிகாரியின் வீட்டில் இரவு உணவு , பார்ட்டி என கொண்டாடுகிறார்க.

போதைப்பொருளுக்கு சொந்தமான கும்பல் மொத்த போலீஸ் குழுவையும் மதுவில் மருந்து கலந்து உயிருக்கே ஆபத்தான நிலையில் மயக்க நிலைக்கு ஆளாகிறார்கள்.அதேவேளையில் சந்தேகக் கேஸ் என அன்றுதான் ஆயுள் தண்டனை முடிந்து வெளியான தில்லியை (கார்த்தி) பிடித்து வைத்திருக்கிறார்கள்.

அத்தனைப் பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பிஜோய் தில்லியிடம் உதவிக் கேட்கிறார். தில்லி உதவி செய்தாரா இல்லையா , மொத்த போலீஸ் குழுவும் என்ன செய்தது என்பது மீதிக் கதை. காதல் ,பாடல்கள், ரொமான்ஸ், ஏன் படத்தில் ஹீரோயின் கூட இல்லை என தெரிந்தும் ஒரு நாயகன் நடிக்க ஒப்புக் கொண்டமைக்கே கார்த்திக்கு பாராட்டுகள் பல. இறுக்கமான முகம், கைதிக்கே உரிய விரக்தி, மகள் மேல் பாசம் என பின்னி எடுத்திருக்கிறார் மனிதர்.

நரேன் கிட்டத்தட்ட அவரும் இரண்டாவது நாயகன் போல்தான் இயக்குநர் கையாண்டிருக்கிறார். போலீஸ் என்றாலே நரேன் பச்சக் அசாமியாக பாத்திரத்தில் ஒட்டிக்கொள்கிறார். இந்தப் படத்திலும் சோடையில்லை. இவர்களைத் தாண்டி மனதில் நிறைகிறார் தீனா. டைமிங் காமெடி, பயம் , என பர பர ஆக்‌ஷனுக்குள் ஆங்காங்கே அவரின் அப்பாவி உடல்மொழி காமெடிகள் ப்ளஸ்.

லோகேஷ் கனகராஜ் ஒரு சிம்பிள் கதையை மிகச் சிறப்பாக சொல்லி, தெளிவான திரைக்கதை அமைத்திருக்கிறார். எவ்வித கமர்ஷியல் வித்தைகளும் இல்லாமல் படம் நம்மை சீட்டில் கட்டிப்போடுவதெல்லாம் இக்காலத்தில் எவ்வளவு பெரிய விந்தை. உண்மையில் லோகேஷ் விந்தைதான் செய்திருக்கிறார். சாம் சி யின் பின்னணி இசை அதிரடி ரகம். இரவிலேயே நடக்கும் கதைக்கும் சத்யன் சூரியனின் கேமரா அடேங்கப்பா என ஒவ்வொரு ஃபிரேமும் ஆச்சர்யம். மொத்தத்தில் 'கைதி' தமிழ் சினிமாவுக்கு ஒரு கண்திறப்பு. பெரிய நாயகர்களுக்கு ஒரு பாடம்.

Tags : Prisoner ,Tamil ,
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு