அப்பா கற்றுத் தந்த விஷயம்; துருவ் விக்ரம் நெகிழ்ச்சி

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்ய வர்மா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு விக்ரம் பேசியதாவது: சேது படத்தின்போதுகூட எனக்கு டென்ஷன் இருந்ததில்லை. இந்த படத்திற்காக கடந்த சில நாட்களாகவே டென்ஷனாக இருக்கிறேன். காரணம், துருவ் நன்றாக வரவேண்டும் என்கிற எண்ணம். தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா, தெலுங்கு அர்ஜுன் ரெட்டி உரிமத்தை முன்பே வாங்கி இருந்தார். அந்தப் படத்தை அவர் துருவ்வை வைத்துதான் ரீமேக் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தார்.

அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. காரணம், அந்த படத்தின் கேரக்டர் கனமானது. அதை துருவால் தாங்க முடியுமா, வயது போதுமானதாக இருக்குமா என்று தயங்கினேன். ஆனால் படம் ஆரம்பித்த பிறகு துருவ்வின் நடிப்பை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். இவ்வாறு விக்ரம் பேசினார்.

விழாவில் துருவ் விக்ரம் பேசியதாவது: அப்பா நல்ல நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும், அவர் நல்ல தந்தை. அப்பா இல்லை என்றால் நான் ஒன்றுமே இல்லை. படத்தில் நான் நடிப்பது, எனது ஸ்டைல் எல்லாமே அப்பாவிடம் இருந்து வந்தது.

என் வயதில் இருந்து கொண்டு அவர் இந்த படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்குமோ அப்படித்தான் நடித்திருக்கிறேன். ரசிகர்களின் அன்புதான் உலகில் பெரியது என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார். அதை நான் உணர்ந்திருக்கிறேன் என்றார். விழாவில் தயாரிப்பாளர்கள் முகேஷ் மேத்தா, கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.பி.சவுத்ரி, இயக்குனர் கிரிசாயா, நடிகைகள் பனிடா சந்து, பிரியா ஆனந்த், நடிகர்கள் ராஜா, அன்பு, இசை அமைப்பாளர் ரதன், ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>