×

கழிவுநீர் ஓடைகளுக்குள் குடிநீர் குழாய் பதிப்பு: மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் ஓடும் அவலம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் மழையின்போது சாலையில் தண்ணீர் தேங்கும் நிலை இருந்து வருகிறது. தண்ணீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களில் மண்டி கிடந்த மண் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டன. இருப்பினும் ஒரு சில இடங்களில் தண்ணீர் சீராக செல்லமுடியாமல் சாலையில் ஓடும் நிலை இருந்து வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் தற்போது புத்தன்அணை குடிநீர் திட்டப்பணிக்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.குடிநீர் குழாய்கள் மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் ஓடைகளில் பல்வேறு இடங்களில் பதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தன. மழைநீர் வடிகால், கழிவுநீர் ஓடைகளுக்குள் குழாய்களை பதிக்ககூடாது என மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் உத்தவிட்டுள்ளனர். இருப்பினும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் சில தெருக்களில் உள்ள மழைநீர் வடிகால், கழிவுநீர் ஓடைகளில் தண்ணீர் செல்ல முடியாமல் தெருக்களில் தேங்கியது. வடசேரி சோழராஜா தெருவிலும் இதே நிலை நீடித்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் தோண்டி பார்த்தபோது கழிவுநீர் ஓடைக்குள் குடிநீர் குழாய் இருந்தது. இதனை பார்த்த ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுபோல் அவ்வைசண்முகம் சாலையின் குறுக்கே பெரிய குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை நேரத்தில் தண்ணீர் செம்மாங்குளத்திற்கு செல்லமுடியாமல் சாலையில் ஓடும் நிலை இருந்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது; மாநகர பகுதியில் தற்போது பாதாளசாக்கடை மற்றும் புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகளுக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு பணிகளும் முடியும் தருவாயில் உள்ளது. குடிநீர் குழாய்களை மழைநீர் வடிகால், கழிவுநீர் ஓடைகளில் பதிக்ககூடாது என கூறியுள்ளோம். இப்படி பதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கழிவுநீர் ஓடை, மழைநீர் வடிகாலில் பதிக்கும்போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டால், குடிநீருடன், கழிவுநீரும் சேர்ந்து வரும். இதனால் கழிவுநீர் ஓடை, மழைநீர் வடிகாலில் போடப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். …

The post கழிவுநீர் ஓடைகளுக்குள் குடிநீர் குழாய் பதிப்பு: மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் ஓடும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari district ,Dinakaran ,
× RELATED பெருஞ்சாணியில் 56.6 மி.மீ மழை பதிவு குமரி...