×

நெடுஞ்சாலை பணியால் குழாய் உடைந்து குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விருத்தாசலம் : ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் சென்னை-கன்னியாகுமரி தொழிற் தட திட்டத்தின் கீழ் விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை இருவழித்தட சாலையாக 22 கிலோ மீட்டர் வரை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு, அதில் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு புதுக்குப்பம், நாச்சியார்பேட்டை மற்றும் கல்லூரி நகர் ஆகிய பகுதிகளுக்கு ஆலடி முடக்கில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து புதுக்குப்பம் பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் உள்ள இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டும் போது குடிநீர் குழாய் உடைந்து சேதமாகி உள்ளது. மேலும் பல இடங்களில் தோண்டிய பள்ளங்கள் மூடாமல் இருப்பதால் குடிநீர் குழாய்களில் அப்பகுதியில் வரும் கழிவு நீர் கலந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி முழுக்க குடிநீரில் செம்மண் கலந்து சிவப்பு நிறத்தில் வருகிறது. இதனால் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலையில் மற்ற உபயோகத்திற்கு நீரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் குடிப்பதற்கு குடிநீர் இன்றி அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் பூவராகவன் நகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த குடிநீரை குடித்து பொதுமக்கள் பலர் வாந்தி பேதி மயக்கத்தில் அவதிப்பட்டு உள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகங்களில் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து 3வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் வெங்கடேசன் கூறும்போது, குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாததால் அதில் கழிவுநீர் கலந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலை துறை நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் இந்த அடைப்புகளை சரி செய்யவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.மேலும் குடிநீர் குழாய்கள் அருகே கழிவு நீர் கால்வாய் செல்வதால், இக்குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு இருக்கும் நிலையில் குழாய்களின் உள்ளே கழிவு நீர் செல்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் இருந்து வருகிறோம். எனவே விரைவில் இந்த பள்ளங்களை மூட வேண்டும். குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும், என்றார்….

The post நெடுஞ்சாலை பணியால் குழாய் உடைந்து குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vrutasalam ,Vrutsasalam-ulundurpet ,Chennai ,Asian Development Bank ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...