×

கோடமூலாவில் நீண்ட காலமாக கைவிடப்பட்ட குடியிருப்புகள் கட்டும் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டது-பழங்குடியினர் மக்கள் மகிழ்ச்சி

கூடலூர் :  கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு கோட மூலா, அல்லூர் வயல், நாயக்கன்பாடி பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணி கடந்த 2018 – 19 ஆண்டில்  துவங்கியது. பாரதப் பிரதமரின் வீடு இல்லாதவர்களுக்கு  தானாக முன் வந்து வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒன்றிற்கு ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரத்தில் பணிகளை முடிக்க வேண்டும். இப்பணிகளை மேற்கொள்வதற்காக வீடுகளின் உரிமையாளர்கள் சார்பில் ஒட்டுமொத்தமாக  நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் ஆரம்பக் கட்ட பணிகளை மட்டும் முடித்துவிட்டு அதற்கான தொகையை பெற்றுக்கொண்டு மேற்கண்ட தொகையில் வீடுகளை கட்ட முடியாது என கூறிவிட்டு கைவிட்டு சென்றுள்ளார். புதிதாக வீடுகள் கட்டுவதற்காக ஏற்கனவே பழங்குடியின மக்கள் வசித்து வந்த கூரை வீடுகளை இடித்துவிட்டு அருகிலேயே பிளாஸ்டிக் ஷீட்கள் மூலம் மூடப்பட்ட குடிசைகளை அமைத்துக் கொண்டனர். நாயக்கன்பாடி 16, அள்ளூர் வயல் 9, கோடமூலா 36 என மொத்தம் 61 வீடுகளின் பணிகளை அரைகுறையில் விட்டுச் சென்று விட்டதாக பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த வீடுகள் பல்வேறு கட்டங்களாக முழுமைப்படுத்தப்படாத நிலையில் உள்ளது. இதனால் இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மழைக்காலங்களில் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்களின் வீடுகளை விரைந்து கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு  கலெக்டரிடம் மனுக்களும் அளிக்கப்பட்டன. எனினும் இதுவரை காலமும் எந்தவித நடவடிக்கையும் இன்றி பணிகள் முடியாத நிலையிலேயே உள்ளது.இப்ப பிரச்னை தொடர்பாக பகுதி வார்டு உறுப்பினர் உஷா தொடர்ந்து மன்ற கூட்டங்களில் அழுத்தம் கொடுத்து வந்தார். இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர மன்ற தலைவர் பரிமளா, துணைத் தலைவர் சிவராஜ்  ஆகியோர் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு புதிய ஒப்பந்ததாரர் ஒருவர் மூலமாக பணிகளை முழுமைப்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.புதிய ஒப்பந்ததாரர்களும் பணிகளை படிப்படியாக நிறைவேற்றிக் கொடுக்க ஒத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.தாங்கள் வசித்த வந்த வீடுகள் உடைக்கப்பட்டு நான்கு வருடங்கள் ஆகியும் புதிய வீடுகள் கட்டப்படாத நிலையில் தற்போது மீண்டும் பணிகள் துவங்கி இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீடு கட்டும் பணிகளை மீண்டும் துவக்குவதற்கு முயற்சி எடுத்த வார்டு உறுப்பினர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு அப்பகுதி பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்….

The post கோடமூலாவில் நீண்ட காலமாக கைவிடப்பட்ட குடியிருப்புகள் கட்டும் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டது-பழங்குடியினர் மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kodamula—tribals ,Kudalur ,Kodamula ,Allur Vyal ,Nayakkanpadi ,Kodamulla ,Dinakaran ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...