×

இயக்குநருக்கு இசைஞானம் அவசியமா?

ஒன் மேன் ஷோ காட்டுவதில் பார்த்திபனுக்கு நிகர் பார்த்திபன்தான். அந்த வகையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் பேசிக் கொண்டே நடித்த பார்த்திபனுக்கு இணையாக பின்னணி இசையில் மிரட்டியவர் சி.சத்யா. இவர் ‘எங்கேயும் எப்போதும்’  உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரிடம் பேசினோம்.

பார்த்திபனோடு ‘ஒத்த செருப்பு’ அனுபவம்?

நிஜமாகவே எனக்கு பெரிய அனுபவத்தைக் கொடுத்தது. படத்தை முதல் முறையாகப் பார்க்கும்போதே வேற லெவல் படமாகத் தெரிந்தது. வழக்கமாக படம் பார்க்கும்போது எந்த மாதிரி இசையைக் கொடுக்கலாம் என்று மனதில் மேலோட்டமாக ஓட்டிப் பார்ப்பேன். ஆனால் ‘ஒத்த செருப்பு’ படத்தைப் பொறுத்தவரை என்னை அப்படி சிந்திக்கவிடாமல் தடுத்துவிட்டது. படத்தில் என்னையும் ஒரு கேரக்டராக இணைத்துக்கொண்டு டிராவல் பண்ண ஆரம்பித்துவிட்டேன். படம் பார்த்து முடித்ததும் ஒருவர் மட்டுமே நடித்த மாதிரி தெரியவில்லை.

இவ்வளவுக்கும் நான் பார்த்த படப் பிரதியில் எஃபெக்ட் செய்து முடிக்காத, முழுமை அடையாத டப்பிங் குரல் இருந்தது. ஆனால் அப்போதே படம் என்னைக் கவர்ந்தது. அந்தப் படத்துக்கு பின்னணி இசை அமைத்ததை உண்மையில் சவாலாக நினைக்கிறேன். நிறைய இடங்களில் நுட்பமாக இசையமைக்க வேண்டும். சிறியளவிலான ஒலியில் இரண்டு மூட் கொண்டு வரவேண்டும். பார்த்திபன் சார் பின்னணி இசை சர்வதேசத் தரத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அதன் காரணமாக ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் உலகின் பலவேறு இடங்களில் இருக்கும் கலைஞர்களை ஒருங்கிணைத்து பின்னணி இசை பண்ணினேன்.

‘ஒத்த செருப்பு’ படத்தில் பெரும்பாலான இடங்களில் வுட்விண்ட்ஸ் செக்‌ஷன் பயன்படுத்தினேன். வுட்விண்ட்ஸ் செக்‌ஷன் இங்கு அவ்வளவாக யூஸ் பண்ணுவதில்லை. வுட்விண்ட்ஸ் என்பது புல்லாங்குழல், பாசூன், கிளாரினெட்  உட்பட சில டோன்கள் சேர்ந்தது. ‘ஒத்த செருப்பு’ பின்னணி இசைக்கான படமாக இருந்தாலும் பின்னணி இசை அமைதியாக இருக்கும். ஏன்னா படத்தின் பிரதான இடத்தை டயலாக் ஆக்கிரமித்திருக்கும். அந்த வகையில்  டயலாக்கை கெடுக்காத வண்ணம் பின்னணி இசை இருக்க வேண்டும்.

பின்னணி இசை லெவல் குறைவாக இருந்ததால் சில இடங்களில் பின்னணி இசை இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் வந்தது. உன்னிப்பாகக் கேட்டால் மட்டுமே பின்னணி இசை கேட்கும். சாரிடம் லெவல் கொஞ்சம் கூட்டலாமா என்று கேட்டேன். ஆனால் இப்போது இருக்கும் லெவல்தான் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்றார்.

சாருடைய கால்குலேஷன் சரியானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் படம் வெளிவருவதற்கு முன்பே ரஜினி சாருக்கு படத்தைத் திரையிட்டபோது வெகுவாகப் பாராட்டினார். ரிலீஸுக்குப் பிறகு பெரிய பெயர் கிடைக்கும் என்றார். அதுபோல் ஏராள மான மக்கள் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்கள். முகம் தெரியாத ரசிகர்கள், பத்திரிகை விமர்சனங்கள் பாராட்டியது பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. சில விமர்சகர்கள் தேசிய விருது கிடைக்கும் என்று பாராட்டினார்கள். மக்களின் இந்தப் பாராட்டை பெரிய அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

பார்த்திபன் ஹேப்பியா?

பார்த்திபன் சாருடன் நான் பணிபுரியும் மூன்றாவது படம் இது. ஏற்கனவே அவர் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளேன். அவருக்கும் எனக்கும் எப்போதும் நல்ல புரிதல் உண்டு. அவருடைய எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். கதையை உருவாக்கும்போதே பின்னணி இசைக்கான இடங்களை விட்டு வைத்திருப்பார்.

பல அடுக்குகளாக காட்சிகளை வடிவமைத்திருப்பார். உதாரணத்துக்கு, படத்தில் ஒரு இடத்தில் ‘வாங்க சாமி’ என்று குரல் வரும். கரண்ட்டாக நடக்கும் இடத்துக்கும் ஏற்கனவே நடந்த இடத்துக்கும் பொருந்துகிற மாதிரி கதவு திறப்பது போல் காட்சி அமைத்திருப்பார். அப்படி தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தும்விதமாக மல்டி லேயர்ஸ் ஒர்க் பண்ணியிருப்பார். அதனால் இரண்டு சிச்சுவேஷனுக்கும் ஒத்துப்போகுமளவுக்கு இசை இருக்கவேண்டும் என்று  எதிர்பார்ப்பார்.

இசையமைப்பாளரிடமிருந்து நல்ல இசை வாங்குவதற்கு இயக்குநர்களுக்கு இசை ஞானம் அவசியமா?


இயக்குநர் என்பவருக்கு இசை  தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இசையைத் தரம் பிரித்து ரசிக்கத்   தெரிந்தாலே போதும். அதுவே பெரிய ஞானம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்ல, இயக்குநர் என்பவருக்கு  தன் கதைக்கு என்ன இசை தேவை என்று சொல்லத் தெரியும். அது தெரிந்தாலே ஒரு படத்துக்குத் தேவையான இசையைப் பெற்றுக் கொள்ளமுடியும். படம் இயக்குபவர்கள் நல்ல பாடல்களை வாங்குவதற்காகவோ அல்லது தங்கள் இசைத் திறமையை வளர்த்துக்கொள்ளவோ இசையைக் கற்றுக் கொள்ளத் தேவையில்லை.

இசையை ரசிக்கத் தெரிந்த அனைவருமே ஞானம் உள்ளவர்கள். நம்முடைய கலாச்சாரத்தில் இசை தெரியாதவர்களே கிடையாது. பிறப்பு முதல் இறப்பு வரை நம் மக்களிடையே இசை கலந்திருக்கிறது. கர்நாடகமளவுக்கு இல்லையென்றாலும் எளிமையான ஏதாவது ஒரு இசையைத் தெரிந்து வைத்திருப்பார்கள். டான்ஸ் தெரிந்து வைத்திருப்பார்கள். அந்தவகையில் எல்லோருக்குள்ளும் இசை என்கிற கலை ஆர்வம் இருக்கிறது.

பாடல்கள் இல்லாமல் பின்னணி இசை மட்டும் பண்ணும்  அனுபவம் எப்படி இருக்கிறது?

வேறு யாருக்கும் பின்னணி மட்டும் பண்ணியது இல்லை. ‘ஒத்த செருப்பு’ படத்தைப் பொறுத்தவரை பார்த்திபன் சாருக்காக பின்னணி இசை அமைக்க ஒப்புக்கொண்டேன். பார்த்திபன் சாருடன் வேலையில் இணையும்போது அது பல அனுபவங்களைப் பெற்றுத் தரும். ‘புதிய பாதை’யில் ஆரம்பித்து இன்றளவும் சினிமாவில் புதிய பாதையைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். உலகப் படமாக வந்துள்ள ‘ஒத்த செருப்பு’ படத்தில் என் பெயர் இடம் பெறுவது பெரிய விஷயம்.

பாடல் இல்லாமல் படங்கள் வருவது அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கை இசையமைப்பாளருக்கு பின்னடைவாகப் பார்க்கிறீர்களா?

பாடல்கள் திரையில் இடம் பெறுகிறது, இல்லை என்பதைவிட பாடல்களை வைத்துதான் புரோமோஷன் நடக்கும். ஒரு படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும் பாடலுக்கான மகத்துவம், மவுசு மாறாது. பாடல் தேவைப்படாதபட்சத்தில் தனியாக ரிலீஸ் பண்ணலாம். ஆனால் பாடல் இல்லாமல் இந்திய சினிமாவில் படம் பண்ண முடியாது. அதற்குத்தான் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

தற்போது இசையமைக்கும் படங்கள்?


ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’. இந்தப் படத்தை எழில் சார் இயக்குகிறார். ஆரி நடிக்கும் ‘அலேக்கா’. த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’. இந்தப் படத்தை ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்குகிறார். இந்தப் படம் மியூசிக்கலாக வேறு பரிமாணத்தில் இருக்கும். இதுதவிர நான்கைந்து படங்கள் கைவசம் உள்ளன.

இசையமைப்பாளர்களில் உங்களுடன் தொடர்பு எல்லைக்குள் இருப்பவர்கள் யார்?

தற்போது லைம்லைட்டில் இருக்கிறவர்களுடன் எனக்கு பரிச்சயம் உண்டு. நானும் ஜி.வி.பிரகாஷும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். நாங்கள் இருவரும் ஒரே காலக்கட்டத்தில் பரத்வாஜ் சாருக்கு கீ போர்டு வாசித்திருக்கிறோம். ஒரே அறையில் கீ போர்டு வாசித்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. அப்போது வாத்தியக் கலைஞர்களாக இருந்த நாங்கள் இசையமைப்பாளராக மாறுவோம் என்பது நினைத்துப்பாராத ஒன்று. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்துக்கு நான் இசையமைப்பது பெரிய சந்தோஷம். ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கும் குத்துப்பாடல் பெரிய வரவேற்பு பெறும்.

உங்கள் இசையில் பிடித்த பாடல் எது?

நிறைய இருக்கு. குறிப்பா சொல்லணும்னா, ‘நெடுஞ்சாலை’ படத்தில் இடம்பெற்ற ‘இஞ்சாதே’, அப்புறம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் இடம்பெற்ற ‘என் ஒருத்தியே’ பாடல்கள் ரொம்பவே பிடிக்கும்.

டியூன் உருவாக்கத்துக்காக வெளிநாடு செல்லும் பழக்கம் உண்டா?

இதுவரை வெளியான அனைத்து டியூன்களும் என்னுடைய ஸ்டூடியோவில் உருவானவை. இசையமைக்க இடத்தைவிட மனம்தான் தேவை. அந்தவகையில் எங்கு இருந்தாலும் எனக்கு இசை வரும். வெளிநாடு போவதில் இருக்கும் ஒரே நல்ல விஷயம் ஊர் சுற்றிப் பார்க்கலாம்.

தனி ஆல்பங்களில் உங்களுக்கு ஆர்வம் உண்டா?

சினிமா இசை தவிர தனி ஆல்பம் பண்ணுவதில் ஆர்வம் காண்பித்து வருகிறேன். அதற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆல்பங்களில் இசையமைக்கும்போது சில செளகரியங்கள் இருக்கும். பெரும்பாலும் நமக்குப் பிடித்தமாதிரி இசையமைக்கலாம். தடைகள் இருக்காது. சுதந்திரம் இருக்கும். சமூகக் கருத்துகளைச்  சொல்லலாம். அப்படி சமூகம், காதல் என்று பல பிரிவுகளில் மூன்று பாடல்கள் பண்ணியிருக்கிறேன். விரைவில் வெளியீடு நடக்கும்.

விஜய் ஆண்டனி, ஹிப்ஹாப் தமிழா போல் உங்களுக்கு நடிக்கும் ஆசை இருக்கிறதா?

நடிக்கத் தெரிந்தவர்கள் நடிக்கிறார்கள். எனக்கு நடிப்பு சுத்தமாக வராது. என்னைப் போன்றவர்கள் நடிக்காமல் இருப்பதுதான் மக்களுக்கு
நல்லது.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்