×

பப்பி - விமர்சனம்

வகுப்பறையில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட கல்லூரி மாணவர், வருண். வயசு கோளாறு காரணமாக எப்போதும் பெண்கள் நினைப்பாகவே இருக்கிறார். ஒரு பெண்ணை காதலித்தால் மட்டுமே இதற்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்று ஐடியா தருகிறார், அவரது நெருங்கிய நண்பர் யோகி பாபு. இந்நிலையில், தன் வீட்டிலுள்ள மாடியில் வாடகைக்கு குடியேறும் சம்யுக்தா ஹெக்டேவை காதலிக்கிறார். சில பல நெருக்கங்களுக்கு பிறகு இரண்டற கலந்து விடுகின்றனர். இதையடுத்து சம்யுக்தா கர்ப்பம் ஆகிறார்.

ஆனால், அதை கலைத்துவிட சொல்கிறார் வருண். ‘ஒரு உயிரின் மதிப்பு தெரியாத உன்னை எனக்கு பிடிக்கலை. இனி என் வாழ்க்கையில் குறுக்கிடாதே’ என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார், சம்யுக்தா. பிறகு வருண் உயிரின் அருமை புரிந்து, காதலியை எப்படி கரம் பிடிக்கிறார் என்பது கதை. சின்ன கேரக்டர்களிலேயே நடித்து வந்த வருண், இதில் ஹீரோவாகி இருக்கிறார். நடிப்பு, காமெடி இரண்டு விஷயத்திலும் பாஸ் ஆகி விடுகிறார். சில நேரங்களில் ஓவர் ஆக்டிங்கும் செய்கிறார். அடுத்த வீட்டுப் பெண் லுக்கில் கவர்கிறார், சம்யுக்தா.

கர்ப்பம் அடைந்ததை அறிந்த பிறகு தவிக்கும் தவிப்பில், நடிப்பிலும் கவர்கிறார். படம் முழுவதும் வருகிறார், யோகி பாபு. காமெடியை விட, புட்பால் பிளேயர் ஆவதற்காக அவர் எடுக்கும் முயற்சி களும், அதற்காக அவர் சந்திக்கும் அவமானங்களும், அவரை ஒரு குணச்சித்திர நடிகராக முன்னிலைப்படுத்துகிறது. வருண் தந்தையாக மாரிமுத்து, வழக்கம்போல் கண்டிப்பான அப்பா. நித்யா, வழக்கம்போலவே பாசமான அம்மா. இவர்களுடன் பப்பி என்ற நாய் அருமையாக நடித்துள்ளது. தரண் குமார் பின்னணி இசையும், பாடல்களும் ஓ.கே ரகம்.

தீபக்குமார் பாடியின் ஒளிப்பதிவு, படத்துக்கு என்ன தேவையோ அதை கொடுத்துள்ளது. இந்த அடல்ட் காமெடி கதையின் மூலமாக, எக்காரணத்தை கொண்டும் கருக்கொலை செய்யாதீர்கள் என்ற மெசேஜ் சொல்கின்றனர். பப்பி நாய் குட்டிகள் போடுகின்ற எபிசோட், யோகி பாபுவின் கால்பந்து ஆட்ட லட்சிய எபிசோட் ஆகியவை மனதுக்கு நெருக்கமாகிறது. மற்ற காட்சிகள் எல்லாமே காதல் என்ற போர்வையில் வரும் ஆபாசம்தான். கல்யாணத்துக்கு முன்பே ஏற்படும் கர்ப்பம், அதனால் வரும் பிரச்னைகள் சினிமாவுக்கு புதிதில்லை என்றாலும், அதை அடல்ட் காமெடி கதையாகவே சொல்ல வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!