×

மழைக்காலத்தில் ஏற்படும் நோய் தொற்றினை தடுக்க சென்னையில் 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள், குடிநீர் பரிசோதனை: குடிநீர் வாரியம் நடவடிக்கை

சென்னை: மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த் தொற்றினை தவிர்க்க சென்னையில்  12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள் வழங்கிடும் பணிகள் மற்றும் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை செய்யும் பணி குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில்  தாழ்வான இடங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனுடன் கழிவுநீர்  கலந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. எனவே,  தேங்கிய மழைநீரை அகற்றவும் கொசு உற்பத்தியை தடுக்கவும் சென்னை மாநகராட்சி  தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மழைக்கால காயச்சலை தவிர்க்க காய்ச்சி  வடிகட்டிய நீரை பருக வேண்டும், சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும், என  டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், பொது மக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் நோய் தொற்றினை தவிர்க்க சென்னை குடிநீர் வாரியம் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று குளோரின் மாத்திரைகளை வழங்கிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், வீடுகள் தோறும் குடிநீர் மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் வசிக்கும் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினம்தோறும் 1000 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) பாதுகாப்பான குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பருவ மழையினால் மழைநீர் தேங்கிய தாழ்வான பகுதிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீரில் கலந்து பருகக் கூடிய குளோரின் மாத்திரைகள் சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீரை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் குடிநீருடன் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் காலரா, டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் இருக்க சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் குறித்து செயற்பொறியாளரின் தலைமையில் பொறியாளர்கள் மற்றும் பகுப்பாய்வாளர்களை கொண்டு ஆய்வகத்தில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் குழு மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், சென்னை முழுவதும் குடிநீரின் மாதிரிகளை சேகரிக்கும் பணிகளை 10 ஒப்பந்த பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.சென்னையில் தினம்தோறும் 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட வந்த நிலையில், தற்போது பருவமழையின் காரணமாக தினந்தோறும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4ம் தேதி வரை 13,780 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது. இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும், என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, பருவ மழையினால் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும், என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது….

The post மழைக்காலத்தில் ஏற்படும் நோய் தொற்றினை தடுக்க சென்னையில் 12 லட்சம் குடியிருப்புகளுக்கு குளோரின் மாத்திரைகள், குடிநீர் பரிசோதனை: குடிநீர் வாரியம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!