×

சென்னையில் 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கிய இளம் பெண்: சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

சென்னை: சென்னையில் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கி இளம் பெண் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அரசு மருத்துமனையில், ஒரு சில நேரங்களில் தாய்மார்களுக்குப் பால் அதிகமாகச் சுரக்காது. அதேபோல பிரசவத்தின்போது தாய் இறந்துவிட்டால் பிறக்கும் குழந்தைக்கு தாய் பால் கிடைக்காது. எனவே, பிறந்த குழந்தைகள் தாய் பால் இல்லாமல் தவிக்கக் கூடாது என்பதால், 2014ம் ஆண்டு முதல் ‘ஹ்யூமன் மில்க் பேங்க்’ திட்டம் என்று சொல்லக்கூடிய ‘தாய்ப்பால் வங்கி’ அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தவகையில், கோயம்புத்தூரில் உள்ள கனியூரை சேர்ந்தவர் சிந்து மோனிகா(29). பொறியியல் பட்டதாரி பெண்ணான இவர் கடந்த 7 மாதங்களாக 50 ஆயிரம் மில்லி தாய்ப்பாலை சேகரித்து கோவை அரசு மருத்துவமனைக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிய மற்றும் இந்திய புக் ஆஃப் சாதனை புத்தகத்தில் இவர் இடம் பிடித்துள்ளார். இதுகுறித்து மோனிகா கூறியிருப்பதாவது:தாய்ப்பால் தானம் வழங்குவதில் எனக்கு முதுகொலும்பாக இருந்தது என்னுடைய கணவர் தான். அவருக்கு தான் நன்றி செல்ல வேண்டும். எனக்கு 19 மாத குழந்தை வெண்பா உள்ளார். என் குழந்தைக்கு உணவளிப்பதை தவிர தனியார் தொண்டு நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி தாய்ப்பாலை சேகரித்து வந்தேன். சேமித்து வைக்கப்படும் பாலினை ஒவ்வொறு வாரமும் தாய்ப்பால் வங்கிக்கு ஒப்படைத்துவிடுவேன். பல பச்சிளம் குழந்தைகள் பயன்பெறும் இந்த சேவையை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். இதன் மூலமாக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்ததது மனமகிழ்வை தருகிறது என்றார்.இதேபோல், சென்னையை போரூரை சேர்ந்தவர் திவ்யா (26). இவருடைய கணவர் பெருமாள் வரதன் (34) தமிழ் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மகிழ்மித்ரன் (18 மாதம்) குழந்தை உள்ளது. திவ்யா கடந்த 15 மாதங்களாக தாய்ப்பால் தானம் வழங்கி வருகிறார். இதுவரை 10 ஆயிரம் மில்லி தாய்ப்பால் தானம் வழங்கியுள்ளார். தாய்ப்பால் தானம் குறித்து திவ்யா கூறியிருப்பதாவது: எனக்கு குழந்தை பிறந்த 2 மாதத்தில் இருந்து தாய்ப்பால் தானம் வழங்கி வருகிறேன். கணவரின் ஒத்துழைப்புடன் சமூக வலையதளங்களின் உதவி மூலமாக தாய்ப்பால் தானம் கொடுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டது. சில மருத்துவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஆலோசனைபடி தாய்ப்பால் தானம் கொடுப்பது எப்படி என்பதை அறிந்து கொடுத்து வருகிறேன். மேலும் தாய்ப்பால் தானம் செய்ய எனக்கு தெரிந்த பெண்களிடம் அவர்களின் பயத்தை போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன் என்றார். இதுகுறித்து தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ரூபா செல்வநாயகி கூறியிருப்பதாவது: கடந்த 2017 ஆண்டுகளாக எங்களுடைய தொண்டு நிறுவனம் சார்பாக தாய்ப்பால் தானம் வழங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக வழங்கி வருகின்றனர். குறிப்பாக மாதம் 200 தாய்மார்கள் தாய்ப்பால் தானம் வழங்கி வருகின்றனர். தாய்ப்பால் தானம் வழங்க முன்வருவோருக்கு  பாலை எப்படி பதப்படுத்துவது, பாலை கொடுப்பதால் ஏற்படும் நன்மை, குழந்தைகளுக்கான பயன்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் கொடுத்து வருகிறோம். மேலும் சேகரிக்கப்படும் தாய்பாலை வாரம் ஒருமுறை எங்களின் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சேகரித்து அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் ஒப்படைக்கின்றனர். தமிழகம் முழுவதும் 22 தாய்ப்பால் வங்கிகள் உள்ளன. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு 7 தாய்ப்பால் வங்கி மட்டுமே இருந்த நிலையில் தற்போது தமிழக சுகாதாரத்துறையின் நடவடிக்கையால் தாய்ப்பால் வங்கி அதிகரித்துள்ளது என்றார்.தாய்ப்பால் வங்கி குறித்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனையின் இயக்குனர் மீனா கூறியிருப்பதாவது: தாய்ப்பால் என்பது குழந்தை பிறந்த ஒருமணி நேரத்தில் தாயின் மூலமாக கொடுக்கப்படுகிறது. இருப்பின் தாய்மார்களுக்குப் பால் அதிகமாகச் சுரக்காமல் போகும் நிலையிலும்,  பிரசவத்தின்போது தாய் இறப்பதால் தவிக்கும் குழந்தைக்கு பால் கிடைக்காத  நிலையில் தாய்ப்பால் வங்கி மூலமாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.தாய்ப்பாலை பலர் முன்வந்து கொடுக்கின்றனர். இருப்பினும் பொதுமக்களிடையே தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். சுகாதாரத்துறை தரப்பில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மருத்துவமனைக்கு வரக்கூடிய தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு கட்டாயம் 6 மாதம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். செயற்கை முறையில் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் மூலமாக எதிர்ப்பு சக்தி குழந்தைகளுக்கு அதிகரித்தல், உடலுக்கு தேவையான ஊட்டசத்து கிடைக்கிறது. தாய்ப்பால் கொடுக்க விரும்பும் தாய்மார்கள் நேரடியாக அரசு மருத்துமனைகளுக்கு சென்று தாய்ப்பால் கொடை ஒப்புதல் படிவத்தை பூர்த்தி செய்து தாய்ப்பாலை தானமாக வழங்கலாம். மேலும், வங்கிகளுக்கு வரக்கூடிய தாய்ப்பால் 6 மாதங்கள் வரை பதப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்….

The post சென்னையில் 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கிய இளம் பெண்: சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...