×

பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் 6 வீடுகள் இடிந்தன: தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை

காலாப்பட்டு:  புதுவை காலாப்பட்டு அடுத்த தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி மீனவர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. மீனவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்ட படகுகள் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். புதுவை அடுத்த தமிழக பகுதியான தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்குப் பிறகு அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு, தொடர்ந்து அந்த பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் உடைமைகளும் சேதமடைந்தன. இதையடுத்து தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம் பகுதியில் தமிழக அரசின் சார்பில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அருகே இருக்கும் தமிழக பிள்ளைச்சாவடி பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுகிறது. மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள், வலைகளை வைப்பதற்குகூட இடமின்றி பிள்ளைச்சாவடி சுடுகாடு பகுதியில் வைக்கும் நிலையுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக தமிழகப் பகுதியான பிள்ளைச்சாவடியில் இருந்த குணசேகரன் (55), சங்கர் (48), பிரகாஷ் (36) உள்ளிட்ட 6 பேரது வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டன. இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதியில் அரசு அறிவித்த தூண்டில் வளைவு திட்டத்தை இப்பகுதியில் உடனே அமைத்து தர கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மீனவர்கள் கூறுகையில், கடந்த ஓராண்டாக இப்பகுதியில் கடலில் இருந்து கடற்கரை வரை 200 மீட்டர் அளவுக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றனர்….

The post பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் 6 வீடுகள் இடிந்தன: தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pillalaichaudi ,Pillaichavadi Fisherman Area ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...