×

தூத்துக்குடியில் மக்கள் தொகை, வாகன பெருக்கம் அதிகரிப்பு; சிப்காட், தென்பாகம் காவல் நிலையங்கள் பிரிக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அதிக அளவு பகுதிகளை கொண்ட சிப்காட் மற்றும் தென்பாகம் காவல் நிலையங்களை இரண்டாக பிரித்து புதிய காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 8 சப்-டிவிசன்களிலும் 7 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளிட்ட மொத்தம் 49 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் மற்றும் சிப்காட் ஆகிய இரு காவல் நிலையங்கள் மட்டும் பிற காவல் நிலையங்களை விட அதிக அளவு பரப்பளவையும், எல்லைகளையும் கொண்டதாக உள்ளது. இதில் சிப்காட் காவல் நிலையத்திற்கு அசோக்நகர், ராஜீவ் நகர் முதல் தனசேகரன்நகர், ஜோதிநகர், முத்தம்மாள் காலனி என சுமார் 52 ஏரியாக்கள் ஓதுக்கப்பட்டுள்ளது. தென்பாகம் காவல் நிலையத்திற்கு சண்முகபுரம், கால்டுவெல்காலனி, இந்திராநகர், ராஜபாண்டிநகர், பீச்ரோடு உள்ளிட்ட 56 பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த பகுதிகளில் இரு காவல் நிலையங்களில் மட்டுமே உள்ள காவல் துறையினரால் இந்த பகுதிகளை சரிவர கண்காணிக்க இயலாத நிலை உள்ளது. காவல் நிலையங்களுக்கு செல்ல சில பகுதி மக்கள் அதிக தொலைவு செல்ல வேண்டியுள்ளது. அவசர காலத்தில் மக்கள் அழைத்தால் போலீசார் வந்து சேரவே முக்கால் மணி நேரம் வரை ஆகும் நிலையும் உள்ளது.மேலும் தற்போது இந்த இரு காவல் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் தொகை, குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் இந்த காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மக்கள் தொகை பெருகிவிட்டது. இதனால் இந்த இரு காவல் நிலையங்களின் எல்லைகளையும் இரண்டாக பிரித்து ராஜீவ்நகரில் மேலும் ஒரு காவல் நிலையமும் சண்முகபுரம் அல்லது ஜார்ஜ்ரோடு பகுதியில் ஒரு காவல் நிலையமும் அமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.  இது குறித்து தூத்துக்குடி 34வது வார்டு கவுன்சிலர் சந்திரபோஸ் ஏற்கனவே முதல்வர் முக.ஸ்டாலின் மற்றும் டிஜிபி, அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி  சிப்காட் காவல் நிலையத்திற்கு அதிக பகுதிகள் ஓதுக்கப்பட்டுள்ளன. இதில் பக்கிள் ஓடையை ஒட்டியுள்ள பொதுமக்கள் பிரச்னை என்றால் அருகில் 5 நிமிடத்தில் செல்லக்கூடிய தொலைவில் தெற்கு காவல் நிலையம் உள்ளது. ஆனால் அவர்கள் பைபாசில் உள்ள சிப்காட் காவல் நிலையத்திற்கு செல்ல சுமார் முக்கால் மணி நேரமாவது ஆகி விடுகிறது. அவசரத்திற்கு போலீசாரை அழைத்தால் அவர்கள் டூவீலரில் வந்தாலே அரைமணி நேரத்திற்கும் மேலாகும். மேலும் எந்த பகுதியில் இருந்தும் வாகனங்கள் இல்லாமல் செல்ல முடியாத நிலையில் உள்ளது.சிப்காட் காவல் நிலையத்திற்கு பஸ் வசதியும் போதிய அளவு இல்லை. எனவே மக்களை பாதுகாக்கும் விதமாக சிப்காட் காவல் நிலையத்தை பிரித்து ராஜீவ் நகர் பகுதியில் தனி காவல் நிலையம் அமைத்து தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக ஆர்வலர் பாஸ்கர் கூறுகையில், ‘தூத்துக்குடியில் கடந்த பல ஆண்டுகளாகவே 2 காவல் நிலையங்களுக்குரிய பகுதிகளை கொண்டதாக இயங்கி வரும் தென்பாகம் காவல் நிலையத்தை பிரித்து புதிய காவல் நிலையம் உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது குறித்து கடந்த 2002-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கும் எடுத்து செல்லப்பட்டுள்ளது. ஆனால் அப்போது அரசு இணைசெயலர் நிதிபற்றாக்குறையினால் சண்முகபுரம் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க முடியாது என்றும் அதற்கு பதிலாக ஒரு எஸ்ஐ, இரண்டு ஏட்டுகள், ஒன்பது போலீசார் என தனிப்பிரிவினர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது இதுவரையில் செயல்படுத்தப்படவில்லை. வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் பிரச்னைகள், குற்றங்களை கருத்தில் கொண்டு தென்பாகம் மற்றும் சிப்காட் காவல் நிலையங்களை பிரித்து புதிய இரு காவல் நிலையங்களை உருவாக்கினால் பொதுமக்கள் பாதுகாப்பிற்கும், குற்றச் செயல்கள் தடுப்பிற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்றார்.தூத்துக்குடி மாநகராட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் தூத்துக்குடி தென்பாகம் மற்றும் சிப்காட் காவல் நிலையங்களை பிரித்து 2 புதிய காவல் நிலையங்கள் உருவாக்க வேண்டியது அவசர அவசியமாகும். …

The post தூத்துக்குடியில் மக்கள் தொகை, வாகன பெருக்கம் அதிகரிப்பு; சிப்காட், தென்பாகம் காவல் நிலையங்கள் பிரிக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Toothukudi ,Chipkat ,South Ghagam ,Sibkat ,Southakam ,Thoothukudi ,South South Guard ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை...