×

இலை கட்சியின் உளறல் மாஜி அமைச்சரின் சீக்ரெட் பிளானில் சிக்கிய அண்ணன் மகனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பூட்டு மாவட்டத்துல பூட்டு மட்டும் விசேஷம் இல்லை… இலை கட்சியின் உள்குத்தும் பேமசாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘பூட்டு மாவட்டத்தின் இலைக்கட்சி மேற்கு புறத்தின் ஒன்றிய செயலாளராக உளறல் புகழ் மாஜியின் அண்ணனின் மகன் இருக்கிறார். மாஜியின் தயவில் ஒவ்வொரு படியாக ஏறி உயர்ந்து தொழிலுடன், அரசியலிலும் வளர்ந்துள்ளாராம். மேற்குப்புறத்தில் கட்சிக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எது நடந்தாலும் கூட்டம் கூட்டி, உளறல் மாஜிக்கு பலம் சேர்த்து வந்தார். அவரது வளர்ச்சி அதிகமாகவே, ஒரு கட்டத்தில், இவருக்கும், மாஜியின் மகன், உங்க அண்ணன் பாசம் போதும் அவரின் மகனை அடக்கி வையுங்க… அவர் தலையெடுத்தால் நான் டம்மியாக நேரிடும் என்று நேருக்கு நேர் தன் தந்தையிடம் சண்டை போட்டதாக அடிபொடிகள் மத்தியில் பேச்சு இருக்கு. துவக்கத்தில் தனது மகனை எப்படியாவது, கட்சியில் பெரிய ஆளாக்க வேண்டுமென மாஜி உளறல் மந்திரி முயற்சி செய்தாராம். ஆனால், மகனிடம் அரசியல் ஆர்வம் சுத்தமாக இல்லையாம். இப்போது, அண்ணன் மகன் தொண்டர்கள் செல்வாக்குடன் கட்சியில் முன்னேறி வருவது, மாஜிக்கு கடும் எரிச்சலை தந்திருக்கிறதாம். இதன் எதிரொலியாகவே, மாவட்டத்தில் நடந்த இலைக்கட்சியின் 51வது விழா பொதுக்கூட்டத்திற்கான அத்தனை செலவுகளையும் அண்ணன் மகன் தலையில் கட்டினாராம். இதை தன் அடிபொடிகளிடம் சொல்லி பொருளாதார ரீதியாக அண்ணன் மகனை டம்மியாக்கி, தன் மகனை பூட்டு மாவட்டத்தில் முதலிடத்துக்கு கொண்டு வருவேன்னு சொன்னாராம். அவர்களும் மாஜி அமைச்சர் சொன்னால் சரியாக இருக்கும் என்று தலையாட்டினாங்களாம். இக்கூட்டத்திற்கு நடிகையை பேச அழைத்ததில் துவங்கி கூட்டம் கூட்டியது, பேனர் கட்டியது, ஸ்டேஜ், மைக் செட் என பெரும் செலவும் அண்ணன் மகன் தலையில்தான் விழுந்துள்ளது. எப்படியாவது மாவட்டத்தில் மிக முக்கிய பொறுப்பை பெற வேண்டுமென்ற ஆர்வத்தில் அண்ணன் மகன் செலவு பிரச்னையை கண்டுகொள்ளவில்லையாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘போலீசார் பிடித்த குட்கா லாரியை காணவில்லைனு யார் யார் மேலே புகார் கொடுத்து இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘பெங்களூருல இருந்து சென்னைக்கு ஒரு கும்பல் கன்டெய்னர் லாரியில 60 ‘எல்’ மதிப்பு குட்கா கடத்திகிட்டு போயிருக்காங்க. அப்போ வெயிலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட் கிட்ட வரும்போது, குட்கா கடத்தல் லாரியை காக்கிகள் மடக்கி பிடிச்சாங்க. கடத்தல் கும்பல் காக்கிகளை பார்த்ததும் தப்பியோடிட்டாங்க. லாரி ஓனர்கிட்ட நடந்ததை சொல்லியிருக்காரு அந்த டிரைவர். ஓனர் கொடுத்த ஐடியாவுல, ஆந்திராவுக்கு போய்ட்டு, குட்கா கடத்தல் டிரைவரு, ஆந்திரா செக்போஸ்ட் கிட்ட லாரிய பார்க்கிங் செஞ்சிருந்தேன். இப்ப லாரிய காணலன்னு, கம்ப்ளய்ண்ட் ெசஞ்சிருக்காரு. காக்கிகளும், கேமராவை செக் பண்ணியிருக்காங்க. ஆனா, அந்த லாரி அந்த செக்போஸ்ட் பக்கமே வராதது தெரியவந்திருக்குது. அந்த நேரத்துல ஆந்திராவுல ஒரு காக்கி, இந்த நம்பர்ல இருக்குற லாரிய தமிழ்நாடு போலீஸ், குட்கா வழக்குல பறிமுதல் செஞ்சிருக்காங்கன்னு பேப்பர்லயும், டிவியிலயும் பார்த்ததாக அதிகாரிகிட்ட சொல்லியிருக்காரு. உடனே அந்த குட்கா டிரைவரை கோழி அமுக்குறமாதிரி அமுக்கி, வெயிலூர் காக்கிகளுக்கு தகவல் கொடுத்திருக்காங்க. வெயிலூர் காக்கிங்க ஆந்திராவுக்கு போய்ட்டு, வசமாக சிக்கிய குட்கா டிரைவரை கைது செஞ்சிருக்காங்க. இப்ப, மற்ற கூட்டாளிகளையும் தேடி வர்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கோவையில் நடந்த ஒரு விசேஷ தகவலை சொல்லுங்க கேட்போம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியையாக பணிபுரியும் ‘ஜெய’மான அந்த ஆசிரியை, குண்டக்க…. மண்டக்கன்னு… செயல்பட்டு, கரன்சி குவிப்பதில் படு உஷாராக இருக்கிறாராம்.. இப்பள்ளிக்கு புதிதாக பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களை மிரட்டி, அவர்களிடமிருந்து பெரும்தொகை கறந்து விடுகிறாராம். மேலும், ஆங்கில மீடியம் வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஒவ்வொருவரிடமும் அரசு விதிமுறையை மீறி, மாதம்தோறும் தலா 200 ரூபாய் வசூல் செய்கிறாராம். இவரது செயலுக்கு வகுப்பு ஆசிரியர்கள் யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களை ஓரம்கட்டி விடுகிறாராம். அத்துடன், அவர்களுக்கு எதிராக மாணவர்களை தூண்டிவிடுகிறாராம். வழக்கமாக, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவராக, பள்ளி மாணவர்களின் பெற்றோர் யாரேனும் ஒருவரைத்தான் தேர்வு செய்வார்கள். ஆனால், இவர் வெளிநபர் ஒருவரை தேர்வுசெய்து, இதற்கு கைமாறாக அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை அமுக்கி விட்டாராம். வசூலில் படு கில்லியாக செயல்படும் இவரைக்கண்டு இப்பள்ளியின் பிற ஆசிரியர்கள் ஒடுங்கிப் போய் உள்ளனர்… இவரை போல நபர்கள் பள்ளியில் இருந்தால் மாணவர்கள் எப்படி ஒழுக்கமாக இருப்பார்கள் என்று கேட்கின்றனர் சக ஆசிரியர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘நெல் கொள்முதல் நிலையத்தில் யாரு ‘கல்லா கட்டுறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் விவசாயிகளின் குறுவை சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்ய 95 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது 53 நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்குகிறது. இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பட்டியல் எழுத்தர்கள் நெல்லை கொள்முதல் செய்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்த நெல் குறித்த தகவல்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சேகரித்து அதை மண்டல அலுவலகத்திற்கு கொண்டு வந்து கொடுக்க இதற்காக கொள்முதல் அலுவலர்கள் 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு தினந்தோறும் செல்லும் இந்த அலுவலர்கள் ரூ.2500 மாமூல் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு காரில் வந்ததற்காக ரூ.500 என ரூ.3 ஆயிரத்தை ‘கல்லா’ கட்டுகிறார்களாம். இந்த கல்லா கட்டும் விவகாரம் தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளதாம். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை பாயக்கூடும் என்பதால் கொள்முதல் அலுவலர்கள் கிலியில் உள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.    …

The post இலை கட்சியின் உளறல் மாஜி அமைச்சரின் சீக்ரெட் பிளானில் சிக்கிய அண்ணன் மகனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Ilai party ,wiki Yananda ,Bhuttu ,Bhuttu District ,Leaf Party ,Uncle ,Peter ,
× RELATED எம்பி தேர்தல் நடக்க இருக்கும்...