×

தொன்மையை பறைசாற்றும் வரலாற்று சிறப்பு மிக்க ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியக பணி துவங்குவது எப்போது?

*ஒன்றிய அரசு அறிவித்து 2 ஆண்டுகளாகியும் ஆரம்பகட்ட பணிகள் கூட நடைபெறவில்லைஸ்ரீவைகுண்டம் : தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்து 2 ஆண்டுகளாகியும் ஆரம்பக்கட்ட பணிகள் கூட இதுவரை நடைபெறாமல் இருப்பது வரலாற்று ஆர்வலர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம், நெல்லையில் இருந்து 24 கிமீ தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. உலகளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்றாக ஆதிச்சநல்லூர் விளங்குகிறது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் 1868ல் முதன்முதலாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியை தொடங்கியது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1886ல் இனப்பகுப்பாய்வுக்கு ஆய்வு செய்துள்ளனர். 1900ல் தொல்லியல் ஆராய்ச்சிக்காக இந்தியா வந்த அலெக்ஸ்சாண்டர் ரியா, தமிழகம் முழுவதும் பல தொல்லியல் ஆய்வுகளை நடத்தி உள்ளார். 1902ல் இருந்து 1904 வரை ஆதிச்சநல்லூரை முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்த அலெக்ஸ்சாண்டர் ரியா ஆய்விற்கு பின்பு, எகிப்திய பிரமிடுகள் என்று சொல்லக்கூடிய புதை குழிகளை விடவும் பழமையானவை இங்குள்ளன என்று கூறியுள்ளார்.மீண்டும் 2004ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை, முனைவர் தியாக சத்யமூர்த்தி மற்றும் குழுவினரை கொண்டு அகழ்வாய்வு நடத்தியது. இந்நிலையில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மதுரை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ஆதிச்சநல்லூரில் இதுவரை 4 கட்ட அகழ்வாய்வு நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுகள் குறித்து எந்த ஆய்வறிக்கையும் வெளியிடப்படவில்லை. எனவே ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும். அகழ்வாய்வை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கின் முடிவில், ஆதிச்சநல்லூரில் கண்டறியப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  அதன் அடிப்படையில் ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருட்களை அமெரிக்காவின் புளோரிடா நகரிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை செய்த முடிவுகளை 2019 ஏப்ரல் மாதம் 4ம் தேதி ஒன்றிய அரசு, உயர்நீதி மன்றத்தில் சமர்ப்பித்தது.ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் கார்பன் பரிசோதனை முடிவுகளில் அந்தப் பொருட்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டறியப்பட்டது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 2 பொருட்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கார்பன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரிய வந்துள்ளது. இதனிடையே ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரையோரம் ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார். இதன் முதற்கட்டமாக ஒன்றிய தொல்லியல் திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள், ஆதிச்சநல்லூரில் கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தையும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 3 இடங்களில் அகழாய்வு நடந்தது. இதில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம், சங்கக்கால வாழ்விட பகுதிகள், அம்புகள், வாள், ஈட்டி, சூலம், தொங்கவிட்டான் போன்ற தொல்லியல் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சி சைட் என அழைக்கப்படும் 1903ம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்த பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் இதுவரை இல்லாத முதுமக்கள் தாழி மூடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அனைத்து முதுமக்கள் தாழிகளின் மூடிகளும் கூம்பு வடிவில் இருக்கும். ஆனால் ஒரு முதுமக்கள் தாழியின் மூடி மட்டும் தட்டை வடிவில் இருந்தது.  அந்த தட்டை வடிவில் உள்ள இடத்தில் பனை ஓலைப்பாய் அச்சுகள் இருந்தன. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் பனை மற்றும் பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்தியு உள்ளதும் உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்த சில நாட்களிலேயே அப்போதைய ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார். அதன்படி ஆதிச்சநல்லூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் தங்கள் பகுதிக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் தனியார் இடங்களையும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இலவசமாக கொடுத்தனர். இதற்காக அவர்களுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. ஆனால் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்து 2 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் இதுவரை ஆதிச்சநல்லூரில் அதற்கான அடுத்தக்கட்ட பணிகள்  நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது வரலாற்று ஆர்வலர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி  உள்ளது. தமிழர்களின் பாரம்பரியத்தையும் நாகரீகத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை அங்கேயே காட்சிப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு அறிவித்தபடி உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் உடனே தொடங்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளில் கிடைத்த பொருட்களை இந்தியா கொண்டு வந்து ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்களின்  கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ் கூறுகையில், ‘உலக நாகரீகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்குட்பட்ட பகுதி. எவ்வித வளர்ச்சிக்கான திட்ட பணிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது, வருத்தமளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றை தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில்  இந்தியாவின் அடையாளமாய் விளங்கும் ஆதிச்சநல்லூரை உலகளவில் கொண்டு சேர்க்க அருங்காட்சியகத்தை உடனே அமைக்க வேண்டும். மேலும்  ஸ்ரீவைகுண்டம் அணையில் படகு குழாம் அமைத்து ஆதிச்சநல்லூர் வரை படகுகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். ‘‘எய்ம்ஸ்’’ போன்று அறிவிப்போடு நின்றதுமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது போல் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்போடு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது, அனைத்து தரப்பினருக்கும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது….

The post தொன்மையை பறைசாற்றும் வரலாற்று சிறப்பு மிக்க ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியக பணி துவங்குவது எப்போது? appeared first on Dinakaran.

Tags : united government ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...