×

டேன் டீயை லாபகரமாக மாற்ற தனியார் ஏஜென்சி மூலம் ஆய்வு-நீலகிரி எம்பி ராசா தகவல்

ஊட்டி :  ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் தேயிலை தோட்ட கழக (டேன் டீ) நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் நேற்று பேச்சு வார்த்தை நடந்தது. இதில், வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், எம்பி ராசா, வனத்துறை முதன்மை செயலாளர் சையது முசாபில் அப்பாஸ், தேயிலை தோட்ட கழக மேலாண்மை இயக்குநர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், நீலகிரி மாவட்டம் மற்றும் வால்பாறை பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களும், தற்போது பணியாற்றி வரும் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்ததாக, தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளதாகவும், அதனை நிவர்த்தி செய்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மற்றும் நீலகிரி எம்பி தெரிவித்ததாக தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து, எம்பி ராசா கூறுகையில்,‘‘தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம்‌ 1976ம்‌ ஆண்டு தாயகம்‌ திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும்‌ நோக்கத்துடன்‌ அப்போதைய முதல்வர்‌ கருணாநிதியால் தொடங்கப்பட்ட கழகமாகும்‌. இக்கழகம்‌ தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அதன்‌ தலையாய நோக்கத்தை தார்மீக கடமையுடன்‌ நிறைவேற்றியுள்ளது. தற்போது, உலக மயமாக்குதல்‌ கொள்கையினால்‌ இந்திய  தேயிலை சந்தையில்‌ ஏற்பட்ட விலை வீழ்ச்சியினாலும்‌, கடந்த சில ஆண்டுகளாக நிதி பற்றாக்குறை நிலவியதன்‌காரணமாக தேயிலை செடிகளை உரிய முறையில்‌ பராமரிக்க இயலாததாலும்‌, உரங்கள்‌ மற்றும்‌ வேதி இடுபொருட்களின்‌ விலை அதிகரித்தது. இக்கழகத்தில்‌ பணிபுரிந்து வந்த தொழிலாளர்களின்‌ குடும்பங்கள்‌ கல்வி மற்றும்‌ பொருளாதார மேம்பாடு அடைந்த காரணத்தினால்‌ இக்கழகத்தில்‌ பணிபுரிய முன்வராததால்‌ தொழிலாளர்‌ பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், தேயிலை அறுவடை இலக்கினை எட்ட முடியாமல்‌ இக்கழகம்‌ தொடர்‌ நட்டத்தை சந்தித்து வருகின்றது. எனவே உபாசியின்‌ விதிமுறைகளின்படி தற்போதுள்ள நிரந்தர மற்றும்‌ தற்காலிக தொழிலாளர்களின்‌ எண்ணிக்கையை கொண்டு, இருக்கும்‌ தேயிலை நிலப்பரப்பை பராமரித்து பசுந்தேயிலை உற்பத்தி தொடர்ந்து நடைபெறும்‌. எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ தோட்டத்‌ தொழிலாளர்கள்‌ வேலை இழக்க மாட்டார்கள்‌. இக்கழகத்தில்‌ நிலவி வரும்‌ கடுமையான நிதி நெருக்கடியிலும்‌ 2016ம்‌ ஆண்டு முதல்‌ நிலுவையிலிருந்து வந்த தொழிலாளர்கள்‌ மற்றும்‌ ஊழியர்களின்‌ ஓய்வூதிய பணிக்கொடை, விடுப்பு ஒப்புவிப்பு ஊதியம்‌, மருத்துவ ஊதியம்‌, ஊதியத்துடன்‌ கூடிய விடுப்பு ஊதியம்‌, கள மேற்பார்வையாளர்களின்‌ நிலுவை ஊதியம்‌ ஆகியவை விடுவிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு ரூ.2838.75 லட்சம்‌ நிதி அரசால்‌ ஒதுக்கப்பட்டு அனைத்து தொகையும்‌ செப்டம்பர்‌ 2022 முதல்‌ அக்டோபர்‌ 2022 வரை அனைவருக்கும்‌ வழங்கப்பட்டது.ஓய்வு பெற்ற பிறகும்‌ தேயிலை தோட்ட கழகத்தின்‌ குடியிருப்பில்‌ வசித்து வருவோருக்கும்‌, இந்த ஓய்வூதிய பலன்கள்‌ தொகை வழங்கப்பட்டன. தொழிலாளர்களுக்கு ஓய்விற்கு பின்னர்‌ ஒரு பாதுகாப்பான வாழ்வு சூழலை அமைத்து தருவதற்காக அவர்களுக்கு வீடு வழங்க கோரி அரசிற்கு 2021ம்‌ ஆண்டு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு அதன்படி தற்போது முதற்கட்டமாக 72 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால்‌ மறுவாழ்வு திட்டத்தின்‌ வாயிலாக, கூடலூர்‌ பகுதியில்‌ வீடுகள்‌ ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஓய்வு பெற்ற 677 தொழிலாளர்களுக்கு பணிக்கொடை மற்றும்‌ இதர பணப்பலன்கள்‌ வழங்கப்பட்டும்‌ இதுவரை அவர்கள்‌ இக்கழக குடியிருப்பினை காலி செய்யாமல்‌ தற்போதும்‌ குடியிருந்து வருகின்றனர்‌.இந்நேர்வு அரசின்‌ கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதல்வரின்‌ அறிவுறுத்தலின்படி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்‌ கீழ்‌ ஏற்கனவே கட்டப்பட்டு வரும்‌ வீடுகளை பயனாளிகளுக்கான உரிய பங்கு தொகையை செலுத்த இயல்பவர்கள்‌, தொகையினை செலுத்தி பெற்று பயனடையலாம்‌. இந்த பங்கு தொகை செலுத்த இயலாதவர்கள்‌ நடுவட்டம்‌ மற்றும்‌ சேரங்கோடு பகுதியில்‌ அரசு தாமாக முன்வந்து வீடுகட்டும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இலவச மனைபட்டாவும்‌ வீடுகட்ட மானியமாக தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் வழங்க நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்‌. 3வது வாய்ப்பாக தங்கள்‌ விருப்பத்திற்கு ஏற்ப தாங்களே வீடுகட்டி கொள்ள விரும்புவோருக்கு இதே பகுதியில்‌ வீட்டுமனை பட்டா இலவசமாக வழங்கவும்‌ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தால், மீண்டும் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகத்தை லாபகரமாக இயங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அப்போது, கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் தேவையில்லாத செலவினங்களை குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகத்தை லாபகரமாக இயங்குவதற்கு தனியார் ஏஜென்சி கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அவர்கள் அளிக்கும் ஆய்வு அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்பித்து, தேவையான நிதி ஆதாரம் பெற்று தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் லாபகரமாக இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார். இக்கூட்டத்தில், வனத்துறை சிறப்பு செயலாளர் ராஜ்குமார்,  கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவலர் சச்சின் உட்பட பலர் கலந்து கொண்டனர். …

The post டேன் டீயை லாபகரமாக மாற்ற தனியார் ஏஜென்சி மூலம் ஆய்வு-நீலகிரி எம்பி ராசா தகவல் appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Ooty ,Tea Plantation Corporation ,Dane Tea ,Tamilnadu ,House ,Tea ,Dinakaran ,
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...