×

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து சம்பவம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து சம்பவத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் கடந்தாண்டு ஏப்ரலில் நடந்த கோர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், பட்டாசு விபத்தில் பலியான ஒவ்வோரு குடும்பத்துக்கும் நிவாரண தொகையாக தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது நீதிமன்றம், இந்த வழக்கை விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மீண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கே வழக்கை மாற்றி அமைத்து உத்தரவிட்டது. தொடர்ந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ‘வெடி விபத்தில் உயிரிழந்த 27 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், 50 சதவீத தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ.15 லட்சமும், 25 முதல் 50 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்’ என்று கடந்த மார்ச் 7ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மீண்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ‘விபத்தில் பலியானவர்களுக்கு உரிய நிதிஉதவியை மாநில அரசு வழங்குகிறது. இவ்விசயத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தலையிட முடியாது. மக்களின் வரிப்பணத்தில் தான் நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது’ என்றார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘தமிழக அரசின் வாதத்தை நீதிமன்றம் புரிந்து கொள்கிறது. இருந்தும் விதிமுறைகளை தளர்த்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரண நிதிஉதவி வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்றனர். தொடர்ந்து தற்போது தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாய பதிவாளர் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்….

The post விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து சம்பவம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar firecracker factory ,Supreme Court ,National Green Tribunal ,New Delhi ,Chatur Firecrackers ,Virudhunagar District ,Virudhunagar Cracker Plant Accident ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு