×

ஆஸ்திரேலியாவில் எனக்கு நல்ல அனுபவம் இருக்கிறது: விராட் கோலி

அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிஅரையிறுதி வாய்ப்பை வலுப்படுத்திக்கொண்டது.இந்த வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா அளித்த பேட்டி: நான் இந்த ஆட்டத்தில் அமைதியாகவும் அதே நேரத்தில் பதட்டமாகவும் இருந்தேன். ஆனால் ஒரு குழுவை ஒருங்கிணைத்து வழி நடத்த அமைதியாக இருப்பது மிகவும் முக்கியம். இது எங்களுக்கு ஒரு நல்ல வெற்றி. அர்ஸ்தீப்பிடம், பும்ரா கடைசி ஓவர்களில் செய்து வந்த வேலையைச் செய்ய கேட்டுக் கொண்டோம். ஒரு இளைஞன் வந்து இந்த மாதிரியான ஒரு வேலையை எடுத்துக் கொண்டு செய்வது சாதாரணமானது இல்லை. நாங்கள் அவரை தயார்படுத்தி உள்ளோம். அவர் 9 மாதங்கள் இதற்காக தயாராகி இருக்கிறார். கோஹ்லி ஆசிய கோப்பையில் இருந்து பார்ம்முக்கு திரும்பி உள்ளார். கேஎல் ராகுலுக்கு அனுபவம் இருக்கிறது. அவர் பேட்டிங் செய்யும் விதம் அவருக்கும் அணிக்கும் மிகவும் முக்கியமானது. அவர் எந்த வகையான வீரர், அவர் எதில் திறமையானவர் என்று எங்களுக்குத் தெரியும். இன்று நாங்கள் எடுத்த சில கேட்சுகள் அருமையாக இருந்தது. ஒரு பெரிய கூட்டத்தின் முன் விளையாடி கேட்ச்களை எடுப்பது அவ்வளவு எளிதானது கிடையாது. எங்களது பீல்டிங் திறமையில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது, என்றார்.ஆட்டநாயகன் விராட் கோஹ்லி கூறுகையில், போட்டி கடைசிவரை பரபரப்பாக சென்றது. நான் இப்படிப்பட்ட ஆட்டத்தைதான் அதிகம் விரும்புவேன். நான் கடந்த இரண்டு வருடங்களில் சிறப்பாக செயல்படவில்லை. கடந்த காலங்களில் நடந்தது கடந்த காலத்தோடு முடிந்துவிட்டது. ஆஸ்திரேலியாவில் நல்ல ஷாட்களை ஆடினால் மட்டுமே ரன் வரும். அதனை மனதில் வைத்துதான் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்கிறேன். ஆஸ்திரேலியாவில் எனக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. இங்கு வலைபயிற்சியில் ஈடுபட்டுவிட்டு, அப்படியே போட்டியில் களமிறங்கியது, வீட்டில் இருந்துவந்து அப்படியே களமிறங்கியதுபோல் இருந்தது, என்றார். வங்கதேச கேப்டன் ஷாகிப் அல்ஹசன் அளித்த பேட்டி: இந்தியாவுடன் நாங்கள் விளையாடும் போதெல்லாம் இதே கதைதான் நடக்கிறது. இது ஒரு சிறந்த ஆட்டம். லிட்டன் தாஸ் எங்கள் அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர் தந்த அதிரடியான தொடக்கத்திற்கு பிறகு இந்த இலக்கை துரத்த முடியும் என்று நினைத்தோம். இந்தியாவின் டாப் ஆர்டர்தான் அவர்களது பலம். எனவே டாப் ஆர்டரை விரைவில் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் டஸ்கின் அகமதுவை தொடர்ந்து பந்து வீச வைத்தேன். ஆனால் துரதிஷ்ட வசமாக அவருக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை, என்றார்….

The post ஆஸ்திரேலியாவில் எனக்கு நல்ல அனுபவம் இருக்கிறது: விராட் கோலி appeared first on Dinakaran.

Tags : Australia ,Virat Kohli ,Adelaide ,8th ICC T20 World Cup cricket series ,Super 12 round ,Dinakaran ,
× RELATED கோலிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்...