×

பட்லர் அதிரடியில் பணிந்தது நியூசிலாந்து; வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து

பிரிஸ்பேன்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர்-12 சுற்று முதல் பிரிவு லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நெருக்கடியுடன் கேப்டன் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 81 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. ஹேல்ஸ் 52 ரன் (40 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சான்ட்னர் சுழலில் விக்கெட் கீப்பர் கான்வேயால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த மொயின் 5 ரன் எடுத்து சோதி பந்துவீச்சில் போல்ட் வசம் பிடிபட்டார். அடுத்து பட்லர் – லிவிங்ஸ்டன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்தனர். பட்லர் 35 பந்தில் அரை சதம் அடித்தார். லிவிங்ஸ்டன் 20, ஹாரி புரூக் 7 ரன்னில் பெவிலியன் திரும்ப, பட்லர் 73 ரன் (47 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். ஸ்டோக்ஸ் 8 ரன் எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆக, இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. சாம் கரன் 6, டேவிட் மலான் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் பெர்குசன் 2, சவுத்தீ, சான்ட்னர், சோதி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, 5 ஓவரில் 28 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. கான்வே 3, ஆலன் 16 ரன்னில் வெளியேறினர். இந்த நிலையில், கேப்டன் வில்லியம்சன் – கிளென் பிலிப்ஸ் இணைந்து உறுதியுடன் போராடி ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தது. வில்லியம்சன் 40 ரன் (40 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ஸ்டோக்ஸ் வேகத்தில் ரஷித் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த நீஷம் 6, டேரில் மிட்செல் 3 ரன்னில் வெளியேறியது, நியூசி. அணிக்கு பின்னடைவை கொடுத்தது. பிலிப்ஸ் 62 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கரன் பந்துவீச்சில் ஜார்டன் வசம் (மாற்று வீரர்) பிடிபட்டார். கடைசி 12 பந்தில் 40 ரன் தேவைப்பட்ட நிலையில், நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சான்ட்னர் 16, சோதி 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் வோக்ஸ், சாம் கரன் தலா 2, மார்க் வுட், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். தனது 100வது சர்வதேச டி20ல் அமர்க்களமாக விளையாடிய பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது….

The post பட்லர் அதிரடியில் பணிந்தது நியூசிலாந்து; வாய்ப்பை தக்கவைத்தது இங்கிலாந்து appeared first on Dinakaran.

Tags : Buttler ,New Zealand ,England ,Brisbane ,ICC World Cup T20 ,Dinakaran ,
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து