×

கடந்த முறை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 20 இடங்களில் நிவாரண முகாம்கள்; தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தகவல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கடந்த முறை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 20 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்று தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தின்போது தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவது வழக்கம். இந்நிலையில், மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மழை காலத்திற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கி நேற்று முன்தினம் அதிகாலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.இதுகுறித்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன் கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கடந்த முறை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 28 இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள 5 மண்டலங்களிலும் தலா 12 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் உடனடி மீட்பு நடவடிக்கை தயார் நிலையில் இருக்க 25 இயந்திரங்கள், 111 டீசல் மோட்டார்கள், 30 மரம் அறுக்கும் இயந்திரங்கள் என அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. ஏரி உடைப்பு போன்ற அபாயம் ஏற்பட்டால் உடனடியாக வெள்ளத்தை கட்டுப்படுத்த 5 மண்டல்களையும் 4,000 மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் வெள்ள பாதிப்புகளை கண்டறிந்து, உடனடியாக தகவல் தெரிவிக்க 140 முதல் நிலை தகவல் அளிப்பவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ள தடுப்பு கண்காணிப்பு குழு தலைவர் திருப்புகழ் கமிட்டி பரிந்துரைத்த வெள்ள தடுப்பு பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டுள்ளது.இதன், காரணமாக மாநகராட்சி பகுதியில் பெரும்பாலான இடங்களில் பாதிப்புகள் குறைந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் பாப்பன் கால்வாய், நாட்டு கால்வாய் ஆகியவற்றை பொதுப்பணி துறையினர் தூர்வாரி உள்ளதால் மழை வெள்ளநீர்  சீராக அதில் சென்று கொண்டுள்ளது. இதில், 12 இடங்களில் ரூ.30 கோடி 75 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் பெருமளவு முடிந்து விட்டதால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காமல் மழைநீர் கால்வாய் வழியாக வெளியேறி வருகிறது. வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் உடனடி தகவல் தெரிவிக்க தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரம் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post கடந்த முறை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட 20 இடங்களில் நிவாரண முகாம்கள்; தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Dambaram Corporation Commission ,Dambaram ,Dambaram Corporation ,Dinakaran ,
× RELATED தறிகெட்டு ஓடிய ஜீப் மோதி விபத்து...