×

அழகிய ஆற்றூரின் அவலம்: பிளாஸ்டிக் கழிவுகள், கழிவுநீரால் சுகாதாரகேடு

குலசேகரம்:  குமரி மாவட்டத்தில் வேகமாக வளரும் பேரூராட்சிகளில் ஒன்று ஆற்றூர் பேரூராட்சி. கல்லூரிகள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தினசரிசந்தை என பரபரப்பாக காணப்படும். இந்த பேரூராட்சி பிற பேரூராட்சிகளுக்கு முன்னோடியாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் திகழ்ந்தது. பிளாஸ்டிக் ஒழிப்பு இளைஞர் அமைப்புகள் சேர்ந்து சாலையோரங்களில் மரங்கள் நடுதல், வீடுகளிலிருந்து கழிவுநீர் வெளியேறி பொது இடங்களில் சுகாதாரகேடு ஏற்படுவதை தடுத்தல் என சுற்றுசூழல் பேணுவதில் முன்னுதாரணமாக திகழ்ந்ததால் இப்பேரூராட்சிக்கு 75-வது சுதந்திரதின அமுதவிழாவில் விருது வழங்கப்பட்டது. விருது பெற்றதோடு சரி நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.100 சதவிகிதம் பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சியாக இருந்த ஆற்றூர் பேரூராட்சி இன்று பிளாஸ்டிக் தடையில்லாத பேரூராட்சியாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு வணிகநிறுவனங்கள், பொது இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வீதிகள் மற்றும் தெருக்களில் தூக்கி வீசப்படும் மட்காத பிளாஸ்டிக் கழிவுகள் குவியலாக தேங்குகிறது. பேரூராட்சி நிர்வாகம் பஸ்போக்குவரத்துள்ள பகுதிகளில் தினமும் குப்பைகளை அகற்றுவதால் வெளிஉலகிற்கு தூய்மையானது போன்று காட்சியளிக்கிறது. உட்பகுதிகளில் சிறு சிறு குறுக்கு சாலைகள், சந்துரோடுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து காணப்படுகிறது. ஆற்றூர் சந்திப்பில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது.இந்த கடைகளில் பார் வசதிகள் இருந்தாலும் குடிமகன்கள் கார், பைக்குகளில் வந்து சரக்குகளை வாங்கி குறுக்கு சந்துகள் மற்றும் ஆற்றூர் சந்தை போன்ற பகுதிகளை கட்டணமில்லா பார்களாக மாற்றி பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்கின்றனர். இவர்களுக்கு வசதியாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப் மற்றும் இதர பொருட்கள் எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. இதனால் பேரூராட்சிகளின் உள்பகுதிகளிலுள்ள தெருக்கள், சாலையோர பகுதிகளில் சுகாதாரகேடுகள் ஏற்படும் வண்ணம் கழிவுகள் தேங்குகிறது. ஒதுக்குபுறமான ஆற்றூர் பேரூராட்சியின் எல்கையாக திருவட்டார் பாலம், சாட்டாத்துறை கோவில் செல்லும் சாலை போன்ற இடங்களில் வழிபோக்கர்கள் வீசி செல்லும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவதற்கு முன்னோட்டமாக வீடுகள், நிறுவனங்களிலுள்ள கழிவுகளை அவர்களின் எல்லைக்குள் உறிஞ்சி குழாய்திட்டம் மூலம் மட்க செய்வதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டது. அதன் பின்னர் வடிகால்களில் கழிவுநீர் பாய்வதும் முற்றிலுமாக அடைக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியாவிலேயே குமரிமாவட்டம் தூய்மையான மாவட்டமாக மாறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டது. இதனால் தெருக்களில் வடிகால்களில் கழிவுநீர் தேங்குவது தடுக்கப்பட்டது. கொசு தொல்லையும் குறைந்தது. இதனை பல இடங்களில் முறையாக நடைமுறைபடுத்தாததால் இந்த திட்டம் முடங்கிபோகும் நிலை உள்ளது. ஆற்றூர் பேரூராட்சியில் ஒரு சில இடங்களில் கழிவுநீர் வடிகால்களில் தடுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான இடங்களில் கழிவுநீர் வடிகால்கள் மற்றும் அருகிலுள்ள வாய்க்கால்களில் கலந்து தண்ணீர் மாசுபடுகிறது. ஆற்றூர் பேரூராட்சியின் பெரும் பகுதிகளுக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்குவது அருவிக்கரை இடதுகரைகால்வாய். இந்த கால்வாயில் ஏராளமான இடங்களிலிருந்து கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. சுற்றுசூழல் பேணுவதில் ஆர்வம் கொண்ட இளைஞர் அமைப்புகளின் உதவியுடன் சாலையோரங்களில் ஏராளமான இடங்களில் மரகன்றுகள் நடப்பட்டது. இதனை தூய்மை பணியாளர்கள் பராமரிப்பார்கள் என்று கூறப்பட்டது. இதனை அனைத்து தரப்பினரும் பாராட்டினர். இன்று இவை முறையாக பராமரிக்கப்படாததால் இந்த மரகன்றுகளை சுற்றிலும் புல் பூண்டுகள் வளர்ந்து மரகன்றுகள் வளரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சுற்றுசூழலை பேணுவதில் ஆர்வம் கொண்ட மக்களும் இளைஞர்களும் உள்ள ஆற்றூர் பேரூராட்சியில் மீண்டும் முறையாக தூய்மை பணிகளை மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி மீண்டும் அழகிய ஆற்றூராக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திடக்கழிவு திட்டத்திற்கு மவுனம்திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட திருநந்திகரை, வேட்டி பகுதியில் 2.80 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு நான்கு பேரூராட்சிகளுக்கு திடகழிவு மேலாண்மை திட்டத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திற்பரப்பு பேரூராட்சிக்கு 1.10 ஏக்கர் நிலபரப்பு, குலசேகரம் பேரூராட்சிக்கு 90 சென்ட், திருவட்டார் பேரூராட்சிக்கு 40 சென்ட், ஆற்றூர் பேரூராட்சிக்கு 40 சென்ட் என இடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பிற பேரூராட்சிகளின் திடகழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதற்கு திற்பரப்பு பேரூராட்சியினர் எதிர்ப்பு தொpவித்து போராட்டம் நடத்துகின்றனர். குலசேகரம், திருவட்டார் பேரூராட்சிகளில் அவசர கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து கட்சி கவுன்சிலர்களும் ஒன்றிணைந்து தங்கள் பேரூராட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திட கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க அனுமதிக்க வேண்டுமென்று மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். ஆனால் ஆற்றூர் பேரூராட்சி நிர்வாகம் மட்டும் மவுனமாக இருப்பது மக்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆபத்தான பயணிகள் நிழலகம்ஆற்றூரிலிருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலையில் அந்திரேயாஸ் காலனிக்கு அருகில் பயணிகள் நிழலகம் ஒன்றுள்ளது. இந்த நிழலகத்தின் மேற்கூரையின் முன்பகுதியிலுள்ள இரும்புதகடு ஒரு பக்கம் பெயர்ந்து கீழே விழும் நிலையிலுள்ளது. இதனை அப்பகுதியினர் கயிறால் கட்டி வைத்துள்ளனர். மழைகாலங்களில் காற்;று வீசும்போது அறுந்து விழுந்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது.பகலிலும் எரியும் தெருவிளக்குகள்ஆற்றூர் பேரூராட்சி பகுதிகளில் தெருவிளக்குகள் இரவு நேரத்தில் தானாக எரியும் வண்ணம் தானியங்கும் சுவிட்சுகள் அமைக்கபட்டுள்ளது. இதனால் லைட்டுகளை எரிய செய்வதற்கு தனியாக ஆள் தேவைப்படாத நிலை இருந்தது. தற்போது இந்த சுவிட்சுகள் செயல் இழந்து விட்டது. லைட்டுகளை எரியசெய்ய சுவிட்சு போடுவதற்கு ஆள் இல்லாததால் பல இடங்கள் இருளாக உள்ளது. சில இடங்களில் உள்ளூர் வாசிகள் லைட்டுகளை போட்டு கொள்கின்றனர். பகல் நேரங்களில் இதனை யாரும் அணைக்காததால் பகலிலும் லைட்டுகள் எரிகிறது. இதனால் பேரூராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது.உடனடி நடவடிக்கைஇது குறித்து ஆற்றூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் கூறுகையில் ஆற்றூர் பேரூராட்சியில் கழிவுநீர் வீடுகளிலிருந்து வெளியேறுவது முதல்கட்டமாக அடைக்கப்பட்டுள்ளது. தற்போது பல இடங்களில் திறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை மீண்டும் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பிளாஸ்டிக் நடமாட்டத்தை கண்காணித்து அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post அழகிய ஆற்றூரின் அவலம்: பிளாஸ்டிக் கழிவுகள், கழிவுநீரால் சுகாதாரகேடு appeared first on Dinakaran.

Tags : Atari ,Kulasekaram ,Kumari ,Aadtur ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!