×

கொரோனா காலங்களில் புதிய கட்டுமான திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாத நிலையில் ரியல் எஸ்டேட் மவுசு மீண்டும் கூடியது: சிறிய வீடுகளை வாங்கியவர்கள் பெரிய வீடுகளை வாங்க விருப்பம்

கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக புதிய கட்டுமான திட்டங்கள் எதுவும்  தொடங்கப்படவில்லை. அதனால் 40-50% ரியல் எஸ்டேட் பில்டர்கள்  ரியல் எஸ்டேட் தொழிலையே விட்டுச் சென்று விட்டனர். தற்போது  ரியல் எஸ்டேட் டிமாண்ட் மீண்டும் அதிகரித்திருக்கிறது. முன்பு சிறிய  வீடுகளை வாங்க விரும்பியவர்கள், இப்போது பெரிய வீடுகளை வாங்க  விரும்புவதாக ரியல் எஸ்டேட் நிறுவன தொழிலதிபர்கள் கூறினர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ரியல் எஸ்டேட்டில் கடந்த மூன்று வருடங்களாக முடங்கியது. அது மட்டுமல்லாமல், 40-50% ரியல் எஸ்டேட் பில்டர்கள் ரியல் எஸ்டேட் தொழிலையே விட்டுச் சென்று விட்டனர். இந்நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் டிமாண்ட் மீண்டும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தென் சென்னையில் பெரும்பாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகம் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், சென்னையின் புற நகரங்களில் மனை, தனி வீடு, வில்லா, அப்பார்ட்மென்ட் அனைத்தும் கலந்த கலவையாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது. சிறிய வீடு வாங்கியவர்கள் தற்போது பெரிய வீடுகளை வாங்கி வருகின்றனர். இந்திய ரியல் எஸ்டேட் விற்பனை சராசரி வளர்ச்சி 7% சதவிகிதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ரியல் எஸ்டேட் விற்பனை வளர்ச்சி 22 சதவீதம் வளர்ச்சி ஆகும். இந்தியாவில் மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில், சென்னையில் விற்காமல் உள்ள வீடுகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதே சமயம், அரசு செய்ய வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. ரியல் எஸ்டேட்டுக்கு தொழில் துறை அங்கீகாரம் வழங்கப் படாததால் பில்டர்கள் வங்கிகளில் கடன் பெறுவது கடினமானதாக உள்ளது. வங்கிக்கு வெளியே அதிக வட்டிக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. ரியல் எஸ்டேட்டை ஒட்டி இரும்பு, சிமென்ட், மணல்  போன்ற 100க்கும் மேற்பட்ட துறைகள் பயன்பெறுகின்றன. எனவே, அரசு ரியல் எஸ்டேட்டுக்கு துறை அந்தஸ்து வழங்குவது மிகவும் அவசியம் ஆகும். இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்ந்தால் ரியல் எஸ்டேட் துறை மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதுகுறித்து ரியல் எஸ்டேட் தொழில் நிறுவனங்கள் கூறுகையில்: இந்தியாவில் பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நிதானமாகச் செயல்படுகின்றன. இஷ்டத்துக்கு கட்டிடங்களைக் கட்டிக்கொண்டே போகிறவர்கள் ஒரு சிலர் இருக்கலாம். ஆனால், பரவலாகத் தேவைக்கேற்ற சப்ளையைக் கொடுப்பவர்களாகவே உள்ளனர். கொரோனா சமயத்தில் எல்லோருமே நெருக்கடியைச் சந்தித்தோம். உலக வல்லரசு நாடுகள் முதல் எல்லா நாடுகளுமே பொருளாதார மந்தநிலையைச் சந்தித்தன. வேலை இழப்பு, வருமான இழப்பு எல்லாமே இருந்தன. இதனால் ரியல் எஸ்டேட்டும் மந்த நிலையில் தான் இருந்தது. ஆனால், இப்போது ரியல் எஸ்டேட் சிறப்பாக உள்ளது. இத்தனை நாட்கள் வீடு வாங்காமல் தள்ளிப் போட்டவர்கள், தயக்கம் காட்டியவர்கள்கூட இப்போது வீடு வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். அதற்கேற்ப வட்டி விகிதமும் குறைவாகத்தான் இருக்கிறது. பில்டர்களும் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வதில் தீவிரமாக இருந்தார்கள்.  இதனால் தமிழக ரியல் எஸ்டேட் மந்த நிலையிலிருந்து சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. வீடுகளின் விலையைப் பொறுத்தவரை, முக்கியமாக நிலத்தின் விலை, கட்டுமானப் பொருள்கள் விலை, லேபர் செலவு, மார்க்கெட்டிங், பைனான்ஸ் காஸ்ட் அப்ரூவல் காஸ்ட், கனெக்‌ஷன்ஸ்கான செலவுகள் போன்ற செலவுகள் எல்லாம் சேர்த்துதான் கணக்கிடப்படும். இவை அனைத்துமே ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தூங்குகிற நேரத்தில் பொருள் களின் விலை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அதுவும் சமீப காலங்களில் மட்டுமே 70% வரைக்கும் விலை உயர்ந்திருக்கின்றன. இதனால் வீடுகளின் விலையும் இனி கணிசமாக உயரவே செய்யும். நிலத்தின் விலை குறைந்தால் மட்டுமே வீடுகளின் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், நிலத்தின் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பே இல்லை. நிலத்தின் சொந்தக்காரர்கள் குறைந்த விலைக்கு விற்கத் தயாராக இல்லை. நிலம் விற்காமல் போனாலும் பரவாயில்லை. குறைந்த விலைக்கு விற்க மாட்டோம் என்று தான் கூறுகின்றனர். இதனால் வீடுகளின் விலை குறைவதற்கான வாய்ப்பு என்பதே இல்லை. அதே சமயம், புதிதாக உருவாகும் நகரங்களில், விரிவாக்கம் செய்யப்படும் பகுதிகளில் மக்களை ஈர்ப்பதற்காக நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்த நகரங்களில் உள்ள விலையை விட குறைவான விலைக்கு விற்க முடிவு செய்துள்ளனர். அதிகமான வீடுகள் கட்டப்பட்டு, சப்ளை அதிகமானால், வீடுகளில் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், நகரங்களின் மையத்தில் முக்கியமான இடங்களில் மனைகள் கிடைப்பது சாதாரண விஷயமில்லை. புறநகரங்களில் வீடுகளைவிட மனைகளை வாங்கி வீடு கட்டவே மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், நகரங்களின் பிரதான பகுதிகளில் மனைகள் சப்ளை இல்லாததால், விலை அதிகமாகவே இருக்கிறது.விலை அதிகமாக இருந்தாலும் வீடு வாங்குவதற்கு இது சரியான நேரம். காரணம், கட்டுமானப் பொருள்களின் விலை கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஆண்டு தோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்றைக்கு வீடு வாங்காதவர்கள் இனிவரும் காலத்தில் இன்னும் அதிகமான பணத்தைத் தந்துதான் வீடு வாங்க வேண்டி இருக்கும்.எனவே, வீடு வாங்குவதைத் தாமதப்படுத்த தாமதப்படுத்த விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கும்.தற்போது எந்தக் கடனையும் விட குறைவான வட்டி விகிதம் வீட்டுக் கடன்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. குடும்பப் பொருளாதாரம் வீடு வாங்குவதற்கு சரியாக இருந்தால் தற்போது கட்டாயம் வீடு வாங்கலாம். மேலும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் கூறுகையில்: ரியல் எஸ்டேட் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருப்பது உண்மை. ஆனால், விலையேற்றம் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. ஒரே ஊரிலும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. எந்த ஊரில் நிலம் வாங்கினாலும் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள இடங்களைத் தேர்வு செய்வதே புத்திசாலித் தனம். உங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ள பகுதிகளில் வீடுகள் அல்லது பிளாட்டுகளைத் தேடுங்கள். அப்போதுதான் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இவ்வாறு கூறினர்….

The post கொரோனா காலங்களில் புதிய கட்டுமான திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாத நிலையில் ரியல் எஸ்டேட் மவுசு மீண்டும் கூடியது: சிறிய வீடுகளை வாங்கியவர்கள் பெரிய வீடுகளை வாங்க விருப்பம் appeared first on Dinakaran.

Tags : Corona ,Corona pandemic ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...