×

பெரும் களங்கம்

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. சந்திரசேகர ராவ் தற்போது தனது கட்சியை தேசிய கட்சியாக அறிவித்து, கட்சியின் பெயரை `பாரத் ராஷ்டிர சமிதி’ என மாற்றியுள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ.வுக்கு  எதிராக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தேசிய அளவில் தலைவர்களை சந்தித்து, அவ்வப்போது ஆலோசனையும் நடத்தி வருகிறார். பிரதமர் மோடியையும், மத்தியில் ஆளும் பா.ஜ.வையும் கடுமையாக விமர்சிப்பதால் இவரை வீழ்த்த பா.ஜ வியூகம் வகுத்துள்ளது. இந்நிலையில், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாகவும், இதற்கான பேரம் நடத்திய 3 பேரை கைது செய்து, இந்த குதிரை பேரத்தை முறியடித்து இருப்பதாகவும் தெலங்கானா காவல்துறை அறிவித்துள்ளது. தெலங்கானாவில் ஆளும் எம்.எல்.ஏக்கள் 4 பேரிடம் தலா ரூ.50 கோடி பணம், அரசு கான்ட்ராக்ட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாகவும், கட்சிமாற வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த ஒருவர் பேரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆசிஸ் நகரில் உள்ள தந்தூர் தொகுதி எம்.எல்.ஏ பைலட் ரோகித் ரெட்டியின் பண்ணை வீட்டில் இந்த பேரம் நடந்துள்ளது. அங்கு, அதிரடி சோதனை நடத்திய போலீசார் 3 பேரை பிடித்துள்ளனர். இந்த தகவல், தேசிய அளவில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கடந்த  ஆகஸ்ட் மாதம் டி.ஆர்.எஸ் கட்சியின் 18 எம்.எல்.ஏக்கள் பாஜவில் இணையப்போவதாக தகவல் வெளியாகி, பெரும் பரபரப்பு உருவானது. அது, அடங்குவதற்குள் தற்போது அடுத்த பீதி உருவாகியுள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் “ஆபரேஷன் தாமரை’’ மூலம் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை பா.ஜ கவிழ்த்து வருகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்களை இழுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சியை பா.ஜ கவிழ்த்தது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 40 பேருக்கு தலா ரூ.20 கோடி என ரூ.800 கோடிக்கு பா.ஜ பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி இருந்தார். இதேபோல், பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பா.ஜ பேரம் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில், மாற்றுக்கட்சியினர் ஆளும் ஒவ்வொரு மாநிலமாக குறி வைக்கப்பட்டு வருகிறது. தற்போது பா.ஜ.வின் பார்வை, தெலங்கானா பக்கம் திரும்பியுள்ளது. 2016-அருணாச்சல பிரதேசம், 2017-மணிப்பூர், 2017-கோவா, 2017-பீகார், 2018-காஷ்மீர், 2018-மேகாலயா, 2019-சிக்கிம், 2019-கர்நாடகா, 2020-மத்தியப்பிரதேசம், 2021-புதுச்சேரி என கடந்த 8 ஆண்டுகளில் கட்சி உடைப்பு, ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் 10 மாநிலங்களை பா.ஜ. தன்வசப்படுத்தியுள்ளது. 2018-ல் காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமைத்து, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370 சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தையே இரண்டு யூனியன்  பிரதேசங்களாக பா.ஜ. அரசு மாற்றியுள்ளது. குதிரை பேரம் நடத்தும் பா.ஜ.வின் இந்த செயல்பாடுகள், இந்திய அரசியல் சாசனத்துக்கே பெரும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது தொடர்ந்தால், இந்தியாவில் அரசியலமைப்பு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விடும். பா.ஜ.வின் இந்த அதிகார தாகம் தடுக்கப்பட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து….

The post பெரும் களங்கம் appeared first on Dinakaran.

Tags : Rashtra Samiti Party ,Chief Minister ,Chandrasekara Rao ,Telangana ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...