×

செண்பகராமன்புதூர் பகுதியில் ரேஷன் கடைகளில் இருந்து நூதன முறையில் அரிசி கடத்தல்-ஊராட்சி தலைவர் குற்றச்சாட்டு

ஆரல்வாய்மொழி :  செண்பகராமன்புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில்நூதன முறையில்  அரிசி கடத்தப்படுவதாக செண்பகராமன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார். செண்பக ராமன்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ரேஷன் கடைகள் உள்ளன. குறிப்பாக செண்பகராமன் புதூரில் ஊராட்சி அலுவலகம் அருகே இந்திரா காலனி மற்றும் சமத்துவபுரம் பகுதிகளிலும் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இக்கடைகளிலும் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் நூதன முறையில் அரிசி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இது பற்றி செண்பகராமன்புதூர் ஊராட்சி  தலைவர் கல்யாணசுந்தரம் கூறியது:  செண்பகராமன்புதூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரசு மூலம் இலவசமாக வழங்கப்படுகின்ற அரிசியை சிலரின் துணையுடன்  கும்பல்கள் நூதன முறையில் அரிசி வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது.   யாருக்கும் சந்தேகம் வராதவாறு  ரேஷன் கடைகளில் இருந்து ஊழியரின் துணையுடன் அரிசியை வாங்கி ,இருசக்கர வாகனங்களில் செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்துவிடுகின்றனர். பின்னர் அதனை மொத்தமாக விற்பனை செய்வதற்காக எடுத்து செல்கின்றனர். இது சம்பந்தமாக கடந்த மாதம் புகார் வந்த நிலையில் நேரடியாக நியாய விலை கடைக்கு சென்று சோதனை செய்தபோது, அதில் ஒரு நபர்  குடும்ப அட்டை இல்லாமல் அதிக அளவு அரிசி வாங்கிக்கொண்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அரிசி மூடையை ஏற்றினார். அவரைப் பிடித்து எச்சரித்து அனுப்பினோம். சில நேரங்களில் பொதுமக்களின் ஏழ்மையினை சாதமாக பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு கடன் வழங்குவது போன்று வழங்கிவிட்டு, அவர்களிடம் இருந்து குடும்ப அட்டையை அடமானமாக வாங்கிக் கொள்கின்றனர். அந்த குடும்ப அட்டையின் மூலம் மாத மாதம்  மொத்தமாக  அரிசி வாங்கி செல்லும் சம்பவமும் நடந்து வருகிறது. அடிக்கடி சட்ட விரோதமாக அரிசி வாங்கி செல்லும் நபரை பிடித்து எச்சரித்த பின்பும், யாருடைய பின்பலத்தினால், அதே நபர் தொடர்ந்து  இருசக்கர வாகனத்தில் வந்து அரிசி எடுத்து செல்கிறார். தினமும் இவ்வாறு எடுத்து செல்வது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியுள்ளது.இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது  கண்டிக்கத்தக்கதாகும். எனவே அதிகாரிகள் உடனடியாக பொதுமக்களுக்காக வழங்கப்படுகின்ற இலவச அரிசியை சில சமூக விரோதிகள் ரேஷன் கடையில்  சட்ட விரோதமாக வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.  இல்லை என்றால் செண்பகராமன்புதூர் பகுதியில் பொதுமக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட நேரிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post செண்பகராமன்புதூர் பகுதியில் ரேஷன் கடைகளில் இருந்து நூதன முறையில் அரிசி கடத்தல்-ஊராட்சி தலைவர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Nutana ,Senbakaramanbuthur ,Chenbakaramanbuthur ,uratashi ,Senbakaramanthur ,Dinakaran ,
× RELATED அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம்...