×

ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது-22 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 22 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கும், கேரள மாநில பகுதிக்கும் குறிப்பிட்ட நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், நகர் மற்றும் கிராமப்புறங்களுக்கு குடிநீர் தேவைக்காக அடிக்கடி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த மே மாதம் 17-ம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு  தண்ணீர் திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று, அப்பகுதி  விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இரண்டு ஒரு வாரத்திற்கு முன்பு  புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்த நடவடிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு,  அதுகுறித்த கருத்துருவை அரசுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து, நேற்று முன்தினம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.  அரசு உத்தரவையடுத்து, நேற்று  ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. வருவாய் கோட்ட உதவி கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, மதகை இயக்கி தண்ணீர் திறந்து வைத்தார். செயற்பொறியாளர் நரேந்திரன், புதிய ஆயக்கட்டு பாசன சங்க தலைவர் அசோக்குமார், செயலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு, 120 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு சுழற்சி முறையில் 75 நாட்களுக்கு, வினாடிக்கு 250 கன அடிவீதம் மொத்தம் 2400 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  இதன் மூலம், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட  பொள்ளாச்சி கால்வாய் பகுதியில் உள்ள 11942 ஏக்கர், வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் உள்ள 5558 ஏக்கர், சேத்துமடை கால்வாயில் உள்ள 2529 ஏக்கர், ஆழியார் ஊட்டுக்கால்வாயில் உள்ள 2303 ஏக்கர் என மொத்தம் 22,332 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.   இந்நிலையில், விவசாயிகள் பலரும் கூறுகையில், ‘ஆண்டாண்டு காலமாக, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பின்போது, 135 நாட்கள் பாசன காலமாக அறிவிக்கப்பட்டு 75 நாட்கள் தண்ணீர் திறப்பு சுழற்சி முறையில் இருக்கும். ஆனால், இந்த முறை 120 நாட்கள்தான் பாசன காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களுக்குள், சுழற்சி முறையில் முழுமையாக தண்ணீர் திறக்கப்படுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏற்கனவே இருந்ததுபோல் பாசன காலத்தை 135 நாட்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்….

The post ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது-22 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Ayakatu ,Aliyar Dam ,Pollachi ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...