×

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி 4 எம்எல்ஏவிடம் பாஜ ரூ.400 கோடி பேரம்: ரூ.15 கோடி பறிமுதல்; சாமியார் உட்பட 3 பேர் கைது

ஐதராபாத்: தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியை கவிழ்க்க டிஆர்எஸ் எம்எல்ஏக்கள் 4 பேரிடம் ரூ.400 கோடி பாஜ பேரம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த பண்ணை வீட்டில் இருந்து ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாஜ சார்பில் பேரம் பேசிய சாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆபரேஷன் தாமரை மூலம் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை பாஜ கவிழ்த்து வருகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்களை இழுத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சியை பாஜ கவிழ்த்தது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 40 பேருக்கு தலா ரூ.20 கோடி என ரூ.800 கோடிக்கு பாஜ பேரம் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி இருந்தார். இதேபோல், பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜ பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் நடத்தப்பட்ட ஆபரேஷன் தாமரை தோல்வியடைந்தது. இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், பிரதமர் மோடி தெலங்கானா சென்றிருந்தார். அப்போது பேசிய ஒன்றிய அமைச்சர், ‘அடுத்த இலக்கு தெலங்கானாதான்’ என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ‘தெலங்கானாவில் ஆட்சி கவிழ்த்தால், டெல்லியிலும் ஆட்சி கவிழ்க்கப்படும்’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஒன்றிய பாஜ அரசை சந்திரசேகர ராவ் நேரடியாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் சில வாரங்களுக்கு  முன்பு தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை (டிஆர்எஸ்) `பாரத் ராஷ்டிர சமிதி’ என தேசிய கட்சியாக அறிவித்து, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். பல்வேறு மாநில முதல்வர்களை சந்தித்த சந்திரசேகர் ராவ், வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் 3ம் அணி அமைக்க திட்டமிட்டு வருகிறார்.இந்நிலையில்,  காங்கிரஸ்  எம்எல்ஏ கோமட்டிரெட்டி ராஜகோபால் பாஜவுக்கு மாறியதை தொடர்ந்து முனுகோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆளும் டிஆர்எஸ் மற்றும் பாஜ இடையே கடும் போட்டி நிலவுகிறது. டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சைபராபாத்தில் உள்ள ஒரு பண்னை வீட்டில் போலீசார் நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு டிஆர்எஸ் எம்எல்ஏக்களிடம் பாஜ சார்பில் பேரம் பேசப்பட்டது அம்பலமானது. அப்போது 3 பைகளில் இருந்த சுமார் ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்த 3 பேரின்  செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து, அந்த செல்போன் மூலம் யார்? யாருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் என்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா கூறியதாவது: ஆளும் டிஆர்எஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்களிடம் தலா ரூ.100 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு காண்ட்ராக்ட் வழங்குவதாக தங்களை விலைக்கு வாங்க பேரம் பேசுவதாக எம்எல்ஏக்கள்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, டிஆர்எஸ் எம்எல்ஏக்கள் பைலட் ரோஹித்ரெட்டி, ரேகா காந்தாராவ், குவ்வாலா பாலராஜூ மற்றும் பீரம் ஹர்ஷவர்தன் ஆகியோரிடம் இந்த பேரம் நடந்தது. இதற்காக, டெல்லியை பூர்வீகமாக கொண்ட, பரிதாபாத்தில் சாமியாராக உள்ள ராமச்சந்திர பாரதி, திருப்பதியை சேர்ந்த ஸ்ரீமநாத ராஜூவின் பீடாதிபதி சிம்மயாஜி, பாஜ தலைவர் நந்தகுமார் ஆகியோர் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி கொண்டிருந்தனர். 4 டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு பெரும் தொகை வழங்கி கட்சி மாற பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சாமியார் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜ சார்பில் பேரம் பேசப்பட்டபோது, போலீசார் கையும் களவுமாக பிடித்தது தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.* டிஆர்எஸ் எம்எல்ஏவின் பண்ணை வீடுபேரம் நடந்ததாக கூறப்படும் பண்ணை வீடு டிஆர்எஸ் எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டியின் பண்ணை வீடு. பேரம் பேசப்பட்ட 4 எம்எல்ஏக்களில் பைலட் ரோஹித்ரெட்டியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. * கைதானவர்களுடன் பாஜ தலைவர்களுக்கு தொடர்பா?டெல்லியை பூர்வீகமாக கொண்ட பரிதாபாத்தில் சாமியாராக உள்ள ராமச்சந்திர பாரதி ஒன்றிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இருப்பது போன்றும், திருப்பதியை சேர்ந்த ஸ்ரீமநாத ராஜூவின் பீடாதிபதி சிம்மயாஜி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இருப்பது போன்றும், தொழிலதிபர் நந்தகுமார் ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டியுடன் இருப்பது போன்ற புகைபடங்களை டிஆர்எஸ் கட்சி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாஜ கட்சி தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளனர். ஆனால், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய கட்சியை குற்றம் சாட்டுவது சரியல்ல என்று டிஆர்எஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி, ‘தொழிலதிபர் நந்தகுமார் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவர். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது’ என்று கூறி உள்ளார்.* தைரியம் இருந்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள் – ஒன்றிய அமைச்சர் சவால்ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி கூறுகையில், ‘தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டு அவர்கள் செய்த நாடகம். எம்எல்ஏக்களே பண்ணை வீட்டிற்கு வருவார்களாம். அவர்களே போலீசில் புகார் தெரிவிப்பார்களாம். இவை அனைத்தும் முதல்வர் சந்திரசேகர் ராவ் எழுதிக்கொடுத்த கதை, திரைக்கதை, வசனம். 4 எம்எல்ஏக்களை பாஜ விலைக்கு வாங்குவதால் தெலங்கானா அரசு கவிழ்ந்து விடுமா? அல்லது பாஜவிற்கு இதனால் என்ன பயன் கிடைக்கும். தைரியம் இருந்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூலம் விசாரணைக்கு நடத்த வேண்டும்’ என்று  கூறினார்….

The post தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி 4 எம்எல்ஏவிடம் பாஜ ரூ.400 கோடி பேரம்: ரூ.15 கோடி பறிமுதல்; சாமியார் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Baja ,Chandrasekara Rao ,Telangana ,Samiyar ,Hyderabad ,DRS MLAs ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...