×

நம்முடைய வெப்ப மண்டலத்திற்கு உண்டான உணவு பொருட்களை மீட்டெடுத்து பாரம்பரிய விதைகள் மூலம் உற்பத்தியை பெருக்க வேண்டும்-விரிஞ்சிபுரத்தில் காண்காட்சியை தொடங்கி வைத்து கலெக்டர் பேச்சு

வேலூர் : நம்முடைய வெப்ப மண்டலத்திற்கு உண்டான உணவு பொருட்களை பாரம்பரிய விதைகள் மூலம் உற்பத்தியை கொஞ்சம் கொஞ்சமாக பெருக்க வேண்டும் என்று விரிஞ்சிபுரத்தில் நடந்த உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். வேளாண் இணைஇயக்குனர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜெயக்குமார் விளக்க உரையாற்றினார். வேளாண் அறிவியல் நிலைய தலைவரும், பேராசிரியருமான திருமுருகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராமச்சந்திரன் வரவேற்றார். முன்னதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது: பூமி இருக்கும் வரை உழவுத்தொழில் இருக்கும். இதற்கு முன்புவரை விவசாயத்துக்கு வழிகாட்டி இல்லாத நிலை இருந்தது. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்பங்கள், புதிய கருவிகள் ஆகியவற்றின் வருகையால் விவசாயம் பெருகி விளைச்சல் அதிகரித்து வருகிறது. இவற்றை தெரிந்துகொள்வதற்காகத்தான் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தட்பவெப்ப மண்டலம் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. வெப்பமண்டலம் சாராத உணவு பொருட்களை இங்கே கொண்டு வந்து நம்மை பழக்கப்படுத்தி உள்ளனர். இதனால் நமது உடலுக்கு உள்ளே பல்வேறு வகையான உற்பத்தியாகும் நோய் வருகிறது. இதை எல்லாம் தவிர்ப்பதற்காக தான் நம்முடைய வெப்ப மண்டலத்திற்கு உண்டான உணவு பொருட்களை மீட்டெடுத்து அதை பயிர் செய்ய வேண்டும். இப்படி பயிர் செய்தால் நம்முடைய சமுதாயத்தில் ரத்த, சர்க்கரை நோய் இல்லாத நிலையை உருவாக்க முடியும். இதை எல்லாம் நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பாரம்பரிய விதைகள் உள்ளது. நெல்லில் மட்டும் இல்லை. காய்கறிகள், பழங்கள், பருப்புகள், மீன் வகைகள், நாட்டு கோழிகள், நாட்டு பசு இவை எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை எல்லாம் கட்டாயம் பின்பற்றி கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியை பெருக்க வேண்டும். வேலூர் மாவட்டம் சென்னை மற்றும் பெங்களூரு மாநகரங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதனால் நமது மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்களை இருமாநகரம் உள்ளிட்ட வெளிச்சந்தைகளில் விற்க ஏதுவாக உள்ளது.எனவே விளைப்பொருட்களை எளிதாக விற்கலாம். ஆட்கள் பற்றாக்குறை காரணத்தால், நாம் பல்வேறு வகையான வேளாண் கருவிகள் பயன்படுத்த வேண்டும். இப்படி பயன்படுத்தினால் வேளாண் பரப்பளவை அதிகப்படுத்தப்படும். தற்போது விளைநிலங்களுக்கு அதிகப்படியான தண்ணீர் பாய்ச்சி விளைவிப்பதற்கு பதில், சொட்டு நீர் பாசன திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பயிருக்கு தேவையான நீர் மட்டுமே சென்றடையும். லாபகரமான தொழிலாக வேளாண்மை இருக்கவேண்டும்’ இவ்வாறு அவர் பேசினார்….

The post நம்முடைய வெப்ப மண்டலத்திற்கு உண்டான உணவு பொருட்களை மீட்டெடுத்து பாரம்பரிய விதைகள் மூலம் உற்பத்தியை பெருக்க வேண்டும்-விரிஞ்சிபுரத்தில் காண்காட்சியை தொடங்கி வைத்து கலெக்டர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Virinchipuram ,Vellore ,
× RELATED வேலூர் சைபர் கிரைம் போலீஸ்...