×

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநோயாளிகளாக சிகிச்சை பெற்று குணமான பட்டதாரிகளுக்கு இன்று திருமணம்

* மருத்துவமனையிலேயே பணியாற்ற பணி ஆணை வழங்கி அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்துபெரம்பூர்: கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநோயாளிகளாக சிகிச்சை பெற்று குணமான பட்டதாரிகளுக்கு இன்று திருமணம் நடந்தது. அமைச்சர் மா.சுப்பிமணியன் வாழ்த்தினார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம் மற்றும் மருத்துவமனை 200 ஆண்டுகள் பழமையானது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த முதுநிலை பட்டதாரியான மகேந்திரன், 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறில் மனநலம் பாதிக்கப்பட்டார். அவரை, கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உறவினர்கள் சேர்த்தனர். அதேபோல் இங்கு, வேலூரை சேர்ந்த ஆசிரியையான தீபா, தந்தை இறந்த சோகத்தில் மனஅழுத்தம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். இவர்களுக்கு மனநல காப்பக  மருத்துவமனை இயக்குனர் பூர்ண சந்திரிகா சிகிச்சை மற்றும் கவுன்சலிங் அளித்தார். இதில் இருவரும் குணமடைந்தனர். எனினும் இருவரும் மனநல காப்பகத்தில் இருந்து வெளியேற மறுத்து அங்கேயே பணியாற்றி வருகின்றனர். மகேந்திரன், நோயாளிகள் பயிற்சி மையத்தில் பராமரிப்பாளராகவும், தீபா, அடுப்பகத்திலும் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டதால் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை காப்பக இயக்குனரிடம் தெரிவித்தார். முதலில் எதிர்ப்பு தெரிவித்த அவர், பின்னர் அவர்களது கருத்துகளை ஏற்று கொண்டு, திருமணத்துக்கு சம்மதித்தார். இதையடுத்து மகேந்திரன்-தீபா ஆகியோரது திருமணம் இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘இதுவரை நான் கலந்து கொண்ட திருமணங்களில் இந்த திருமணம், எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. திருமணமான தம்பதியர் பட்டதாரிகள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என வெற்றியழகன் எம்எல்ஏ வலியுறுத்தினார். அதனடிப்படையில் இந்த மருத்துவமனையிலேயே வார்டு மேற்பார்வையாளராக பணி நியமன ஆணை வழங்குகிறேன். கீழ்பாக்கம் மனநல காப்பக மருத்துவமனையில் ₹40 கோடி மதிப்பில் கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இங்கு காலியாக உள்ள இடங்களில் பேக்கரி, நெல் பயிரிடும் பணிகள் நடக்கிறது’ என்றார். இதையடுத்து மகேந்திரன்-தீபா ஆகியோர் மருத்துவமனையிலேயே பணியாற்றும் வகையில், பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார். இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி, வெற்றியழகன் எம்எல்ஏ, மனநல காப்பக இயக்குநர் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநோயாளிகளாக சிகிச்சை பெற்று குணமான பட்டதாரிகளுக்கு இன்று திருமணம் appeared first on Dinakaran.

Tags : Kilpauk Mental Asylum ,Minister ,M. Subramanian ,
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...