×

விறுவிறுப்புடன் நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தல்; வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அந்த வகையில் 2019-2022ம் ஆண்டுக்கான தேர்தல் ஜூன் 23ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிர்வாகிகள் பாண்டவர் அணி சார்பில் மீண்டும் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்த அணியை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளராக பிரசாந்த், துணைத் தலைவர்களாக குட்டி பத்மினி, உதயா போட்டியிடுகின்றனர்.

சங்கத்திலிருந்து 61 பேர் நீக்கப்பட்டது உள்பட பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக கூறி சங்க பதிவாளர் தேர்தலை நடத்த தடை விதித்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஷால் வழக்கு தொடர்ந்தார். இதில், 61 பேரை நீக்கியது சரிதான். 23ம் தேதி தேர்தலை நடத்தலாம். ஆனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடத்த முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து சென்னை மயிலாப்பூரிலுள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. கடந்த முறை தேர்தலும் இங்குதான் நடந்தது.

சங்கத்தில் 3,644 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 3,171 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு ஒய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் எப்பாஸ் பள்ளியில் தேர்தல் துவங்கியது. நடிகர், நடிகைகள் திரளாக வந்து வாக்களித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாலை 5 மணிக்கு தேர்தல் முடிந்ததும் 8 மணிக்குள் பள்ளியை காலி செய்துவிடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன்படி வாக்களிப்பு முடிந்ததும் அனைவரும் வெளியேறினர். இதற்கிடையே தபால் ஓட்டுகளுக்கான படிவம் பலருக்கு தாமதமாக கிடைத்ததாக கூறப்பட்டது.

மும்பையில் படப்பிடிப்பில் இருந்த ரஜினியும் தபால் ஓட்டு படிவம் தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க முடியவில்லை என கூறியிருந்தார்.
கமல்ஹாசன் கூறும்போது, ‘ரஜினி ஓட்டு போட  முடியாமல் போனது வருத்தமான விஷயம். அடுத்த முறை இதுபோன்ற பிரச்னைகளை  தவிர்க்க வேண்டும். தேர்தலில் அரசியல் தலையீடு இருக்காது என நினைக்கிறேன். அப்படி இருந்தால் இருக்கக் கூடாது என்பது என் வேண்டுகோள்’ என்றார். மூத்த நடிகை ராதா கூறும்போது, ‘மும்பையில் வசிக்கும் எனது  மகள்களும், நடிகைகளுமான கார்த்திகா, துளசி இருவருக்கும் தபால் ஓட்டு  கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது’ என்றார். மொத்தம் 1604 வாக்குகள்  பதிவானதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தனர். பின்னர் வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்க கொண்டு செல்லப்பட்டது.

வாக்களித்தவர்கள் விவரம்: நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், நாசர், கே.பாக்யராஜ், பூச்சி முருகன், விஜயகுமார், பிரசாந்த், ஆர்யா, பிரகாஷ்ராஜ், விவேக், சந்தானம், ஷாம், மயில்சாமி, சிபிராஜ், அருண் பாண்டியன், பார்த்திபன், சார்லி, சின்னி  ஜெயந்த், மன்சூர் அலிகான், சுந்தர்.சி, வெ.ஆ.மூர்த்தி, பாண்டியராஜன்,  சாந்தனு, ராம்கி, கிங்காங், சக்தி, பொன்வண்ணன், சிவகுமார்,  கவுண்டமணி, ரகுமான், உதயா, ஐசரி கணேஷ், நடிகைகள் குஷ்பு, சினேகா, நிக்கி கல்ராணி, வரலட்சுமி,  ரித்விகா,  கே.ஆர்.விஜயா, அம்பிகா, காயத்ரி ரகுராம், ராதா, வெ.ஆ.நிர்மலா, ஜெயபாரதி, லலிதகுமாரி, வடிவுக்கரசி, ரோகிணி, நிரோஷா, சரண்யா பொன்வண்ணன்,  பூர்ணிமா பாக்யராஜ், ஆர்த்தி உள்பட பலர் வாக்களித்தனர்.

Tags : Actors Association Election Polling ,
× RELATED தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு