×

தமிழகத்தில் கொரோனாவால் 2 ஆண்டுக்கு பிறகு தீபாவளி களைகட்டியது; பட்டாசு வியாபாரிகள் மகிழ்ச்சி: ரூ.500 கோடி விற்பனையானதாக தகவல்

சென்னை: கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தமிழகத்தில் தீபாவளி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பட்டாசு வியாபாரம் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீபாவளிக்கு தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.500 கோடிக்கு பட்டாசு விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் வழக்கமாக சிறப்பாக கொண்டாடும் தீபாவளி பண்டிகையைகூட கொண்டாட முடியவில்லை. இந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் உற்சாகமுடன் தீபாவளியை கொண்டாடினர். காலையில் எழுந்து, குளித்து புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். காலை முதல் இரவு வரை போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். குறிப்பாக, இந்த தீபாவளி பண்டிகைக்கு பகலில் வெடிக்கும் வெடியை விட இரவு நேரத்தில் வெடிக்கும் மத்தாப்பூ பட்டாசு அதிகளவில் வெடிக்கப்பட்டது. குறிப்பாக, சென்னையில் இதுபோன்ற பட்டாசுகள் வெடிக்கும்போது, இரவை பகலாக்கும் அளவுக்கு வானத்தில் பட்டாசு வர்ணஜாலம் காட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகர் பகுதிகளில் மழை இல்லாமல் இருந்தது பட்டாசு பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி, ஆங்காங்கே பட்டாசு விற்பனைக்காக தனி கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, சிவகாசியில் இருந்து நேரடியாக சென்னைக்கு வந்து பலரும் தள்ளுபடி விற்பனையில் பட்டாசுகளை விற்பனை செய்து அசத்தினர். இந்த கடைகளில் கடந்த சில நாட்களாகவே கூட்டம் அலைமோதியது. நேற்றும் வானம் தெளிவாக இருந்ததால் பொதுமக்களும் ஆர்வமுடன் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். சென்னையில் நேற்று இரவு 9 மணி வரைகூட பட்டாசு கடைகளில் பட்டாசுகளை வாங்க அதிகளவில் மக்கள் திரண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. அதனால், இந்த தீபாவளிக்கு பட்டாசு வியாபாரிகள் அதிகளவில் விற்பனை செய்து, அதிக லாபம் பார்த்தனர். இதுகுறித்து சிவகாசி பட்டாசு வியாபாரிகள் சிலர் கூறும்போது, “நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் பட்டாசு விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டிருந்தது. இதனால் சிவகாசி பட்டாசு தொழிலாளிகள் பெரியஅளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டதால், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாகவே சென்னையில் தீவுத்திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பட்டாசுகள் விற்கப்பட்டது. பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் முக்கிய நகர் பகுதியான மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேரடியாக சிவகாசியில் இருந்து பட்டாசு விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருந்தோம். சென்னை உள்ளிட்ட முக்கிய நகர் பகுதிகளில் மழை இல்லாமல் வானம் தெளிவாக இருந்ததால் பட்டாசு பிரியர்கள் மிகவும் ஆர்வமுடன் பட்டாசு வெடிக்க முடிந்தது. நேற்று இரவு வரை கூட பட்டாசு கடைக்கு வந்து பட்டாசுகளை வாங்கி சென்றனர். இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பட்டாசு வியாபாரிகள் அதிக லாபம் பெற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் ரூ.500 கோடி வரை பட்டாசு விற்பனையாகி இருக்கலாம். ஆனாலும் இதுகுறித்து முழுமையான தகவல் கிடைக்கவில்லை” என்றனர்….

The post தமிழகத்தில் கொரோனாவால் 2 ஆண்டுக்கு பிறகு தீபாவளி களைகட்டியது; பட்டாசு வியாபாரிகள் மகிழ்ச்சி: ரூ.500 கோடி விற்பனையானதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Corona ,Tamil Nadu ,Chennai ,Diwali ,Firecrackers ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...