×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்த்தன்மை விசாரணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு

சென்னை: 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 36 வகையான உட்பிரிவுகளைச் சார்ந்த 7,94,697 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இது மாநில மொத்த மக்கள் தொகையில் 1.10 விழுக்காடு ஆகும். பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதாரம், சுற்றுப்புறத் தூய்மை, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் அனைத்து மக்களுக்கும் இணையாக உயர்த்தும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் அவர்களை அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி அடையச் செய்திட தமிழக முதலமைச்சர் அவர்கள் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.பழங்குடி மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கையுடைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் பரிந்துரையின் பேரில், சென்னை, சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களில் செயல்பட்டு வந்த  பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்த்தன்மை விசாரணை பிரிவுகள் மேற்படி விசாரணையினை துரிதப்படுத்தும் பொருட்டு கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்து அரசாணை எண்.97, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நாள் 21.10.2022-இல் வெளியிடப்பட்டுள்ளது.சென்னை மண்டலம் : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம்,   கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு  ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை தலைமையிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மண்டலம் : சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர்,  அரியலூர், பெரம்பலூர், நீலகிரி  ஆகிய மாவட்டங்களுக்கு சேலம்  தலைமையிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலம் :   மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர், தென்காசி, திருச்சி,  தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மதுரை தலைமையிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் (புதிய) மண்டலம் : வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை,    இராணிப்பேட்டை,  தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு வேலூர் தலைமையிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார். …

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்த்தன்மை விசாரணையில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar ,Tribal Welfare Department ,Chennai ,Tamil Nadu ,
× RELATED அரசு பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு...