×

9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரம்: கேரள கவர்னரின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் திடீர் தடை

திருவனந்தபுரம்: கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும் இடையே சமீப காலமாக கடும் பனிப்போர் நிலவி வருகிறது. முதல்வர் பினராயி விஜயன், மாநில அமைச்சர்களுக்கு எதிராக கவர்னரும், கவர்னருக்கு எதிராக பினராயி விஜயன் உள்பட அமைச்சர்களும் நேரடியாக விமர்சனம் செய்து வருகின்றனர். கவர்னர் பதவிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் விமர்சனம் செய்தால் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று ஆரிப் முகம்மது கான் எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் தான் இந்த மோதலுக்கு காரணமாகும்.இந்தநிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அப்துல் கலாம் தொழில்நுட்ப பக்கலைக்கழக துணைவேந்தர் ராஜேஸ்வரி, யுஜிசி நிபந்தனைகளை மீறி நியமிக்கப்பட்டதாக கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை 2 தினங்களுக்கு முன்பு விசாரித்த உச்சநீதிமன்றம், துணைவேந்தர் ராஜேஸ்வரியை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.ஏற்கனவே கண்ணூர், கோழிக்கோடு, கேரளா உள்பட 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் யுஜிசி நிபந்தனைகளை மீறி நியமிக்கப்பட்டதாக கவர்னருக்கு புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக் கழக துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து 9 பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் விளக்கம் கேட்டு கவர்னர் ஆரிப் முகம்மது கான் நோட்டீஸ் அனுப்பினார்.மேலும் 24ம் தேதி (நேற்று) காலை 11.30 மணிக்குள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். தடாலடியாக 9 துணைவேந்தர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து 5 துணைவேந்தர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தீபாவளி தினமான போதிலும் நேற்று மாலை 4 மணிக்கு இந்த மனுக்கள் மீது விசாரணை நடந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், 9 துணைவேந்தர்களை பதவி விலக கூறிய கவர்னரின் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பது: துணைவேந்தர்கள் யுஜிசி நிபந்தனைகளை மீறி நியமிக்கப்பட்டிருந்தால் அவர்களை சட்டப்படிதான் பதவி நீக்கம் செய்ய வேண்டும். 9 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் உரிய விளக்கம் கிடைக்கும் வரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்….

The post 9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரம்: கேரள கவர்னரின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் திடீர் தடை appeared first on Dinakaran.

Tags : 9 University ,Kerala ,Thiruvananthapuram ,Kerala government ,Governor ,Arip Mohammad Khan ,Chief Minister ,Pinarayi… ,Kerala Governor ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...