×

கேதர்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கு ரூ.3,400 கோடியில் சாலை, ரோப்வே: அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

டேராடூன்: உத்தரகாண்டில் உள்ள புகழ் பெற்ற கேதர்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கு ரூ.3,400 கோடியில் சாலை, ரோப்வே பணிகளை மேற்கொள்வதற்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ளார். நேற்று காலை முதலில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பிரபல கேதர்நாத் கோயிலுக்கு சென்றார். இம்மாநில மலைவாழ் மக்கள் அணியும் பாரம்பரிய உடையை அணிந்து கோயிலுக்கு சென்று, சிறப்பு பூஜைகள் செய்து சுவாமியை வழிபட்டார். பின்னர், கவுரிகுந்த் – கேதர்நாத் இடையே 9.7 கிமீ தூரத்துக்கு ரோப்வே அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், பக்தர்கள் கவுரிகுந்தில் இருந்து 30 நிமிடங்களில்  கேதார்நாத் கோயிலை சென்றடையலாம். இதைத் தொடர்ந்து, ஆதி குரு சங்கராச்சாரியார் நினைவிடத்துக்கு சென்ற மோடி, அங்கு சிறிது நேரத்தை செலவழித்தார். பின்னர், ஹெலிகாப்டர் மூலமாக சமோலி சென்றார். அங்கு, பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். மானா கிராமத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மோடி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத்  கோயில்களுக்கு ரூ.3,400 கோடி மதிப்பீட்டில் சாலை, ரோப்வே அமைக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், விழாவில் பேசிய அவர், ‘காசி விஸ்வநாதர் கோயில், உஜ்ஜைனி மற்றும் அயோத்தியில் உள்ள கோயில்களில் சமீபத்தில் பெரிய அளவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக அடிமை மனப்பான்மை காரணமாக இவை புறக்கணிக்கப்பட்டு வந்தன. நமது சொந்த மரபின் பெருமையும், வளர்ச்சிக்கான ஒவ்வொரு முயற்சியும் தான் 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் அடித்தளமாக இருக்கும்,’ என தெரிவித்தார்….

The post கேதர்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கு ரூ.3,400 கோடியில் சாலை, ரோப்வே: அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Kedarnath ,Badrinath ,Modi ,Dehradun ,Uttarakhand ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…