×

தொடர் மழை எதிரொலி.. நிலக்கோட்டையில் நிரம்பியது நீர்நிலைகள்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கண்மாய், குளம், குட்டை என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள அணைப்பட்டி, விளாம்பட்டி, பள்ளபட்டி, மைக்கேல்பாளையம், சிறுமலை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்து வந்த மழையை அடுத்து ஆங்காங்கே சிறு- சிறு குளம், குட்டைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் தமிழக வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு, பகலாக தினமும் கொட்டி தீர்க்கும் கனமழையால், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் இப்பகுதியிலுள்ள 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள், குளங்கள் வேகமாக நிரம்பி வெளியேறி ஓடுகிறது. மேலும் ெதாடர் மழையால் கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து விவசாய சங்க தலைவரும், இயற்கை ஆர்வலருமான மாதவன் கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகளாக சரியான நேரத்தில் பருவமழை பெய்யாததால் குறிப்பிட்ட காலத்தில் செய்யக்கூடிய நெல், கரும்பு, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை செய்ய முடியாமல் போனது. இதனால் இப்பகுதி விவசாயிகள், போதிய வேலைவாய்ப்பின்றி கூலித்தொழிலாளர்களாகி திருப்பூர், கோவை, சென்னைக்கு இடம்பெயர்ந்து விட்டனர். தற்போது தொடர் மழை காரணமாக குளம்,குட்டை,கண்மாய்கள் நிரம்பி ஓடுகிறது. போர்வெல், கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. மேலும் கனமழை தொடரும் என்ற அறிவிப்பாலும், அடுத்தடுத்து பல புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாலும் இப்பகுதி விவசாயம் மீண்டும் புத்துயிர் பெறுவதுடன் வெளியூர் சென்ற விவசாயிகள் திரும்பவும் ஆர்வமுடன் விவசாயம் செய்ய முன்வருவர்’ என்றார்….

The post தொடர் மழை எதிரொலி.. நிலக்கோட்டையில் நிரம்பியது நீர்நிலைகள் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Kanmai ,Kulam ,Kuttai ,Dinakaran ,
× RELATED முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற...