×

7.5% இட ஒதுக்கீடு கலந்தாய்வு தேர்ச்சி பெற்ற 565 பேருக்கு மருத்துவ ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு கலந்தாய்வில் தேர்ச்சி பெற்ற 565 பேருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆணை வழங்கினார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில்  2022-2023 ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் என மொத்தம் 565 இடங்கள் உள்ளன. அதில் எம்.பி.பி.எஸ் 459,  பி.டி.எஸ்க்கு 106 இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மொத்தமாக 36 அரசு மருத்துவ கல்லூரிகள், 19 தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் 2 பல் மருத்துவ கல்லூரி என 58 மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மேலும், 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமாக 2695 மாணவர்கள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து இருந்தனர். அதில் 2674 மாணவர்கள் தகுதி உடையவர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 555 இடங்கள் ஒத்துக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 565 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில்  தேர்வு செய்யப்பட்ட 565 அரசு பள்ளி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினார்.பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 2022-2023ம் ஆண்டின் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பற்கான 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் 2695 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 1195 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். அதில் 565 இடங்களுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்றது. மருத்துவ படிப்பை பொறுத்த வரை 10,825 எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்கள் உள்ளது. அதில் அரசு இடங்கள் மட்டும் எம் பி.பி.எஸ் 6,143 இடங்கள் உள்ளன. அரசு கல்லூரிகளில் மட்டும் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் 459 இடங்கள் உள்ளன. அதேபோல், பிடிஎஸ் மொத்தம் 2150 இடங்கள் அதில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 106 இடங்கள் உள்ளது. இந்த ஆண்டு 200 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் கடந்த ஆண்டு 555 இடங்கள் கிடைத்தது. இந்த ஆண்டு 565 இடங்கள் கிடைத்துள்ளது. 565 மாணவர்களுக்கும் மருத்துவ பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்யப்பட்டு மடிக்கணினி வழங்கப்படும். நீட் தேர்வின் விலக்கு பெறுவதற்கு அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதேபோல், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி செய்யப்பட்ட மாணவர்கள் வேறு கல்லூரியில் படித்து வந்தால் அந்த கல்லூரியில் மாணவர்கள் செலுத்திய தொகையை தமிழக அரசு வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.* கனவிலும் நினைக்கவில்லை: – தந்தை கண்ணீர் பேட்டிஎம்பிபிஎஸ், பிடிசஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் 1500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 565 இடங்கள் தேர்வு செய்து ஆணை வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளி, நெசவாளர், விவசாயி குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனியாண்டி, மகேஷ்வரி இவர்களின் மகன் கார்த்திகேயன் அரசு ஒதுக்கீட்டின் மூலம் எம்பிபிஎஸ் படிப்புக்கான சீட்டு கிடைத்தது. இதையடுத்து இவர் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மகனுக்கு மருத்துவ சீட்டு கிடைத்ததையடுத்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் என் மகன் டாக்டருக்கு படிப்பான் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. ஆனால் என்னுடைய மகன் அரசு ஒதுக்கீட்டில் எனக்கு சீட்டு கிடைக்கும் என நம்பிக்கையாக சொன்னார். அதேபோல் சீட்டு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் தன் மகனை பார்த்து டாக்டர் படிப்பு  முடித்ததும் கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள், வயதானவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கூறினார். அந்தியூரை சேர்ந்த சங்கீதா கூறுகையில், என்னுடைய அப்பா,அம்மா நெசவு தொழில் பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் டாக்டருக்கு படிக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள். ஆனால், நீட் தேர்வில் சாதிக்க முடியுமா என பயமாக இருந்தது. ஆனால், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் படித்து முடித்து ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே என் கனவு என்றார்….

The post 7.5% இட ஒதுக்கீடு கலந்தாய்வு தேர்ச்சி பெற்ற 565 பேருக்கு மருத்துவ ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subhiramanian ,Chennai ,Suframanian ,Ma. Suframanyan ,
× RELATED மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு...