×

மது அருந்தும்போது தகராறு; பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை: 2 பேர் கைது; 2 பேருக்கு வலை

பெரம்பூர்: புளியந்தோப்பில் நேற்று நள்ளிரவில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை புளியந்தோப்பு வாசுகி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் மாரி (எ) லொடங்கு மாரி (40). இவருக்கு பார்வதி என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர். புளியந்தோப்பு பகுதியில் பன்றி வியாபாரம் செய்து வந்தார் மாரி. அதற்கு பிறகு வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார். இவர் மீது புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், கொடுங்கையூர், வியாசர்பாடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு உள்ளிட்ட 29 வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், நேற்றிரவு லொடங்கு மாரி மற்றும் அவரது நண்பர்களான புளியந்தோப்பு கன்னிகாபுரம் 7வது தெருவில் வசிக்கும் கொருக்குப்பேட்டை மாரி, கார்த்திக் (எ) பிள்ளை கார்த்திக், மணிகண்டன் (எ) கருப்பா, மார்ட்டின், லட்சுமணன் ஆகிய 5 பேர் புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 2வது தெரு பகுதியில் உள்ள கால்வாய் அருகே அமர்ந்து மது அருந்தினர். சிறிது நேரத்தில் அனைவருக்கும் போதை தலைக்கு ஏறியது. அப்போது, லொடங்கு மாரிக்கும் கொருக்குப்பேட்டை மாரிக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தகராறு வலுத்தது. அந்த நேரத்தில் கொருக்குப்பேட்டை மாரி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லொடங்கு மாரியை சரமாரியாக வெட்டினார். இதில், பலத்த ரத்த காயத்துடன் அலறி துடித்தார். அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் மற்ற 3 பேரும், லொடங்கு மாரியை இறுக்கமாக பிடித்து கொண்டனர். இதையடுத்து, கொருக்குப்பேட்டை மாரி, மேலும் லொடங்கு மாரியை சரமாரியாக வெட்டினார். பயங்கர அலறல் சத்தம் கேட்டது. இதை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் 4 பேரும் தப்பி ஓடினர்.சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த லொடங்கு மாரியை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் லொடங்கு மாரி உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து கொருக்குப்பேட்டை மாரி உள்ளிட்ட 4 பேரை தேடி வந்தனர். இந்நிலையில், புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் பதுங்கியிருந்த மணிகண்டன் (எ) கருப்பா, லட்சுமணன் ஆகியோரை இன்று அதிகாலையில் கைது செய்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள், ‘அனைவரும் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தபோது, திடீரென லொடங்கு மாரிக்கும், கொருக்குப்பேட்டை மாரிக்கும் தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில், கடந்த வாரம் பேசின் பிரிட்ஜ் பகுதியில் ரவுடி கார்த்திகேயனை வெட்டி கொன்றது போன்று உன்னையும் கொல்ல போகிறார்கள். அதனால் கவனமாக இரு. அடிக்கடி தகராறு செய்யாதே, என்னிடமும் அடிக்கடி லஞ்சமாக பணம் கேட்காதே’ என மிரட்டும் தொனியில் கொருக்குப்பேட்டை மாரியை லொடங்கு மாரி எச்சரித்தார். அதனால் ஆத்திரத்தில்தான் கொருக்குப்பேட்டை மாரி, மறைத்து வைத்திருந்த கத்தியால் லொடங்கு மாரியை சரமாரியாக வெட்டினார்’ என்று கூறினர்.தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘கொருக்குப்பேட்ைட மாரி மீது 37 வழக்குகளும், பிள்ளை கார்த்திக் மீது 16 வழக்குகளும், மணிகண்டன் (எ) கருப்பா மீது 12 வழக்குகளும் உள்ளது. அனைவரும் புளியந்தோப்பு பகுதியில் ரவுடியாக வலம் வருகின்றனர். இரவு நேரங்களில் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர். நேற்றிரவும் அவ்வாறு மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் சக நண்பர்களே தீர்த்து கட்டியது’ தெரியவந்தது. தலைமறைவான கொருக்குப்பேட்டை மாரி உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர். கொருக்குப்பேட்டை மாரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post மது அருந்தும்போது தகராறு; பிரபல ரவுடி சரமாரி வெட்டி படுகொலை: 2 பேர் கைது; 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Perampur ,Roudi Saramari ,Pleyanthoph ,Roudi Chamari ,
× RELATED நாய்கள் தொல்லை மாநகராட்சியில் புகார்