×

அதிகாலை கல்லூரி மாணவனை மிரட்டி வாட்ச், செல்போன் பறித்த 3 ஆசாமிகளுக்கு அடி, உதை: திருநங்கைகளுக்கு போலீசார் பாராட்டு

சென்னை: புளியந்தோப்பில் பிரியாணி சாப்பிட வந்த போது, வழி தெரியாமல் நுங்கம்பாக்கத்தில் சிக்கிய கல்லூரி மாணவனை, மிரட்டி வாட்ஸ், செல்போன் பறித்த 3 கொள்ளையர்களை திருநங்கைகள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை ஆவடியை சேர்ந்த கல்லூரி மாணவன் லலித் வர்ஷன் (18). இவருக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் பீப் பிரியாணிதான் அதிகளவில் சாப்பிடுவார். இந்நிலையில், நேற்று அதிகாலை தனது வீட்டில் இருந்து பீப் பிரியாணி சாப்பிட புளியந்தோப்புக்கு தனியாக பைக்கில் வந்துள்ளார். பல இடங்களில் இரவு நேரத்தில் பாதுகாப்பு கருதி மேம்பாலங்களை போலீசார் மூடியுள்ளனர். இதனால் வழி தெரியாமல் புளியந்தோப்புக்கு செல்ல வேண்டிய கல்லூரி மாணவன், நுங்கம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார். பிறகு கல்லூரி மாணவன் லலித் வர்ஷன் தாம் வழி தெரியாமல் வேறு இடத்திற்கு வந்ததை உணர்ந்து, சாலையோரம் நின்று இருந்த 3 வாலிபர்களிடம் புளியந்தோப்பு செல்ல எப்படி போக வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது தனியாக பைக்கில் வந்த கல்லூரி மாணவனுக்கு வழி கூறுவது போல் பைக் சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டு, அவர் அணிந்து இருந்த விலை உயர்ந்த வாட்ச், செல்போனை பறித்துக்கொண்டனர். மேலும், கல்லூரி மாணவனை மிரட்டி பணத்தை கேட்டுள்ளனர்.அந்த நேரம் திருநங்கைகள் அவ்வழியாக சென்றுள்ளனர். ஒரு வாலிபரை 3 பேர் மடக்கி மிரட்டி பணம் பறிப்பதை பார்த்து அவர்களிடம் வந்து, என்ன என்று கேட்டுள்ளனர். உடனே 3 வாலிபர்களும் திருநங்கைகளை பார்த்து இங்கிருந்து ஓடிவிடுங்கள்….. இல்லை என்றால் உங்களிடமும் நாங்கள் பணத்தை பறிக்க நெரிடும் என்று எச்சரித்துள்ளனர். உடனே கல்லூரி மாணவன், திருநங்கைகளிடம் என்னை காப்பாற்றுங்கள். வீட்டிற்கு தெரியாமல் பீப் பிரியாணி சாப்பிட வந்துவிட்டேன் என்று கூறி அழுதுள்ளார். உடனே திருநங்கைகள் 3 பேரிடமும் கல்லூரி மாணவனை விட்டுவிடும்படி கூறினர். ஆனால் அவர்கள் விடாமல் வாட்ச் மற்றும் செல்போனுடன் தப்பி செல்ல முயன்றனர். அப்போது திருநங்கைகள் ஒன்று கூடி 3 வாலிபர்களையும் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் 3 பேரையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்படி 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சென்னை சூளையை சேர்ந்த வழிப்பறி கொள்ளையன் அருண்குமார் (21), பிரசாந்த் (21), விஜயகுமார் (20) என தெரியவந்தது. இவர்கள் மூன்று பேர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவன் லலித் வர்ஷன் கொடுத்த புகாரின்படி 3 வழிப்பறி கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். குற்றவாளிகளை பிடித்து கொடுத்த திருநங்கைகளுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post அதிகாலை கல்லூரி மாணவனை மிரட்டி வாட்ச், செல்போன் பறித்த 3 ஆசாமிகளுக்கு அடி, உதை: திருநங்கைகளுக்கு போலீசார் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pulyanthop ,Nungambakkam ,WhatsApp ,
× RELATED சென்னை புளியந்தோப்பில் இந்து முன்னணி...