×

மூதாட்டியிடம் செயின் பறிப்பு சிசிடிவி கேமரா ஆய்வு மூலம் 4 மணிநேரத்தில் ஆசாமி கைது

பெரம்பூர்: மூதாட்டியிடம் முகவரி கேட்பதுபோல, 6 சவரன் செயினை பறித்துச் சென்ற ஆசாமியை, சிசிடிவி கேமரா பதிவு மூலம் 4 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கொளத்தூர் கம்பர் நகர் 5வது தெருவில் வசித்து வருபவர் அம்சா (81). இவரது கணவர் பார்த்தசாரதி இறந்துவிட்டார். தற்போது மகனுடன் அம்சா வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அம்சா வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அவரிடம் கொளத்தூருக்கு எவ்வாறு செல்ல  வேண்டும் என வழிகேட்டுள்ளார். அம்சா வழி கூறவே, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு அந்த நபர் ஓடினார். அம்சா கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் ஆசாமி தப்பிவிட்டார்.பிறகு கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக  சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் உதவி கமிஷனர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைத்தனர். லோகநாதன், சிவமணி, சண்முகம் உள்ளிட்ட இன்ஸ்பெக்டர்கள் தனித்தனியாக அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மொபட்டில் திருடன் வருவதும், செயினை பறித்துவிட்டு செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து, பல்வேறு சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியுடன் கொளத்தூர் வடக்கு மாவட்ட வீதி பகுதியைச் சேர்ந்த அருண் பிரகாஷ் (36) என்ற நபரை அன்று இரவே கொளத்தூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 சவரன் தங்க சங்கிலி மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல்  செய்யப்பட்டன திருட்டுப்போன 4 மணி நேரத்தில் திருடன் பிடிக்கப்பட்டு  திருடப்பட்ட பொருளும் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….

The post மூதாட்டியிடம் செயின் பறிப்பு சிசிடிவி கேமரா ஆய்வு மூலம் 4 மணிநேரத்தில் ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,
× RELATED இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது