×

கீ - விமர்சனம்

இன்றைய  அதிநவீன உலகை  ஆள்வது இணையதளம்தான். இதையே மையமாக வைத்து பல படங்கள் வெளியாகிஇருக்கின்றன. அதிலிருந்து சற்று மாறுபட்டு வந்திருக்கிறது, கீ. இணையதளத்தின் வில்லன்களாக கருதப்படும் ஹேக்கர்ஸ்களை சுற்றி நடக்கும் கதை. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜீவா. கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் புலி. அதுவும் அடுத்தவர்களின் செல்போன்களை ஹேக் செய்து, அதன்மூலம் அவர்களின் ரகசியங்களை தெரிந்துகொண்டு, ஜாலியாக விளையாடுவது அவரது பொழுதுபோக்கு. அவருக்கு நட்பாகிறார் அனைகா. தனது அங்கிள் ஒருவரின் போனை யாரோ ஹேக் செய்து மிரட்டுகிறார்கள். அவர்களை கண்டுபிடித்து தர முடியுமா என்று கேட்கிறார்.

அவரும் கண்டுபிடிக்கிறார். அது மற்றவர்களின் செல்போனை ஹேக் செய்து, அவர்களை தங்களின் அடிமையாக்கி, சொல்வதை செய்ய வைக்கும் மிகப் பெரிய நெட் ஒர்க். தாங்கள் யார் என்பதை கண்டுபிடித்து விட்ட ஜீவாவை குறிவைக்கிறது அந்த நெட்ஒர்க். ஹேக்கிங் தெரிந்த ஜீவாவுக்கும், அந்த ஹேக்கர்ஸ் நெட்ஒர்க்கிற்கும் இடையில் நடக்கின்ற ஆடுபுலி ஆட்டம்தான் படம். புது டெக்னாலஜி படம் என்பதால், அதற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் காளீஸ். சில தொழில்நுட்ப விஷயங்கள் ஆடியன்சுக்கு புரியாவிட்டாலும், சுவாரஸ்யமான திக்...திக் திரைக்கதை அதை தாண்டிச் செல்ல உதவுகிறது.

என்றாலும், இயக்குனர் சொல்ல வந்த விஷயத்தை விறுவிறுப்பாக சொல்லாமல், கதையை எங்கெங்கோ நகர்த்திக்கொண்டு சென்று, படத்தின் வேகத்தை அவரே தடுத்தும் விடுகிறார். குறிப்பாக, அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் அப்பா, மகன் சென்டிமென்ட் மற்றும் அனைகா, ஜீவா ரொமான்ஸ், நண்பர் ஆர்ஜே பாலாஜியுடன் அடிக்கும் அரட்டை இப்படி நிறைய இருக்கிறது. இவற்றுக்கு எடிட்டர் நல்லபடியாக கத்தரி போட்டிருந்தால், படம் இன்னும் விறுவிறுப்பாகி இருக்கும்.

ஜீவா வழக்கமான மிடில் கிளாஸ் லவ்வர் பாய் கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார். ஹேக்கர்ஸை கண்டுபிடிக்க அவர் காட்டுகிற பரபரப்பில் நடிப்பில் புது பரிமாணம் தெரிந்தாலும், அடிக்கடி சிவா மனசுல சக்தி ஜீவா தெரிகிறார். நிக்கி கல்ராணி வளவளவென்று பேசுகிறார். கெட்டவார்த்தைகள் சொல்கிறார். தண்ணி அடிக்கிறார். பிறகு ஜீவாவை காதலிக்கிறார். அனைகாவுக்கு சில காட்சிகள்தான் இருக்கிறது. ஜீவாவின் தந்தையாக வரும் ராஜேந்திர பிரசாத், ஓவர் நடிப்பில் வெறுப்பேற்றுகிறார்.

சுஹாசினி வழக்கம் போல் பாசக்கார அம்மா. ஆர்ஜே பாலாஜி சிரிக்க வைக்கிறார். ஆனால், சீரியசான காட்சிகளில் வெறுப்பேற்றுகிறார். வில்லன் கோவிந்த் பத்மசூர்யா, வழக்கமான டெக்னாலஜி வில்லன். அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு கிளாஸ். இரவு நேர சென்னையை ஆகாயத்தில் இருந்து அற்புதமாக படமாக்கி இருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை, படத்தை விறுவிறுப்பாக்குகிறது. பாடல்கள் கவனிக்க வைக்கவில்லை. அனைகா இறந்தது கூட தெரியாமல் இருக்கிறார், ஜீவா. கிளைமாக்சில் வில்லன் ஹீரோவுக்கு கிளாஸ் எடுக்கிறார். ஒளிந்திருக்கும் வில்லனை ஜீவா கண்டுபிடிப்பதில் லாஜிக் இல்லை. இப்படி சில குறைகள் இருந்தாலும், கீ புதிய முயற்சி.

Tags :
× RELATED சிறகன் விமர்சனம்