×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: சின்னசுருளி அருவியில் குளிக்க தடை; நீர்நிலைகளில் கண்காணிப்பும், கவனமும் அவசியம்

வருசநாடு:தேனி மாவட்டம் மேகமலை, ஹைவேவிஸ், கோம்பைத்தொழு மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளின் நலன்கருதி  அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழை மற்றும் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால், தேனி மாவட்டத்தில் உள்ள நதிகள், குளங்களில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நதிகள், குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும். இதில் உள்ள ஆபத்தை அறியாமல் விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் நீர்நிலைகளில் குளிக்கின்றன. தண்ணீர் ஓடும் வேகம் அதிகரித்துள்ளது. ஆனால் இதனை உணராமல் சிலர் ஆபத்தான குளியலை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். தண்ணீரின் வேகமான சுழலில் சிக்கிய பலர் கடந்த காலங்களில் இழுவைத் தண்ணீர் அடித்து சென்று உயிர்பலிகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இக்காலத்தில் உரிய கவனம் எடுத்து ஆறுகளில் குளிக்க வருபவர்கள், துவைக்க வருபவர்கள் என அனைவரையும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பெரியாறு, வைகை அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் காட்டாறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல் அருவிகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் , கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் நீர்நிலைகளில் குளித்து வருகின்றனர்.தேனி அருகே பொம்மயகவுண்டின்பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரியின் மகன் சஞ்சய் (24), உறவினர்களான புதுமண தம்பதியினர் ராஜா, காவ்யா மற்றும் சஞ்சய் பிரணவ் (12) ஆகியோர் பெரியாற்றுக் கோம்பை சின்ன ஆறு பகுதிக்கு குளிக்க காரில் சென்றனர். ஆற்றில் இறங்கி 4 பேரும் குளித்தபோது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் ராஜா, காவ்யா, சஞ்சய் ஆகியோர் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதைப் பார்த்த சிறுவன் சஞ்சய் பிரணவ் கூச்சலிட்டான். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி, தம்பதி உட்பட 3 பேரின் உடல்களையும் மீட்டனர். விருந்துக்கு வந்த இடத்தில் புதுமண தம்பதி உட்பட 3 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வருசநாடு அருகே மேகமலை – கோம்பைத்தொழு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சின்னச்சுருளி அருவிருக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவியானது மேகமலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அருவிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வனத்துறை அனுமதி பெற்று வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக வருசநாடு  வனப்பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு செல்லும்  சுற்றுலாப் பயணிகள் குளிக்க கூடாது என மேகமலை வனத்துறை எச்சரிக்கை விடுத்து  திருப்பி அனுப்பி வைத்து வருகிறது. மேலும் தேனி மாவட்டத்தில் பரவலாக கன   மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக கன மழை பெய்து  வருவதால் இன்னும் அதிகளவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை  அறிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில்  சின்னச்சுருளி அருவியில்  தொடர்ந்து அருவியில் குளிப்பதற்கு தடை நீடிக்கிறது. அருவியின் மேல்  பகுதியில் இருந்து பாறாங்கற்கள் உருண்டு விழ வாய்ப்புள்ளதால் அருவியில் குளிக்க தடை  விதித்துள்ளோம் என வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.அனைத்து துறைகளும் ‘ரொம்ப அலார்ட்’வடகிழக்கு பருவமழையினால் அதிக மழைபெறும் காலங்களில் நீர்வரத்து அதிகரித்தால், ஆற்றங்கரைப்பகுதிகளில் வசிக்கின்ற பொது மக்கள் கவனமுடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை ஆற்றங்கரைப்பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது. நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாமென ஒலிபெருக்கி மூலம் உள்ளாட்சி அமைப்பினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. அதுபோல் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகள் அதிக மழைப்பொழிவு ஏற்படும் காலங்களில் மழைநீரில் நெற்பயிர் மூழ்கியுள்ள தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரை வடித்திட வேண்டும். வயலில் தேங்கியுள்ள நீரை வயல் மட்டத்தை விட ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்துவிட வேண்டும். மேலும் சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றிட மர அறுவை இயந்திரம், ஜே.சி.பி போன்ற இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மின்சார வாரியம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளை ஆற்றில் குளிக்க அனுமதிக்காதீர்இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால், ஆபத்தை உணராமல் குளிப்பதும், உற்சாகமாக துவைப்பதும் அதிகமான அளவில் நடக்கிறது. பள்ளங்கள் அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளதால் எந்த இடம் மிகவும் ஆபத்தான இடம் என தெரியாமல் மாணவர்கள், சிறுவர்கள் துள்ளிக்குதித்து ஆற்றில் குளியல் போடுகின்றனர். இதனால் நீச்சல் தெரிந்தவர்களை கூட  நொடிகளில் இழுத்து சென்றுவிடுகிறது. தண்ணீரில் மூழ்குபவர்கள் சில  நிமிடங்களில் மூச்சுத்திணறி இறக்கும் நிலை உள்ளது. அதுபோல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்கின்றனர். எனவே பெற்றோர், தங்களது பிள்ளைகளை மிக கவனமாக பார்ப்பதுடன் ஆற்றில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுரை வழங்க வேண்டும், என்றனர்….

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: சின்னசுருளி அருவியில் குளிக்க தடை; நீர்நிலைகளில் கண்காணிப்பும், கவனமும் அவசியம் appeared first on Dinakaran.

Tags : Theni district ,Megamalai ,Highavis ,Gombatulu hills ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம்; வெறிநாய் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்!