×

வெளிநாடுகளுக்கு பறக்கும் சாயல்குடி பனங்கற்கண்டு: கிலோ ரூ.1500 வரை விற்பனை

சாயல்குடி: சாயல்குடி பகுதியில் கடந்த 41 நாட்களுக்கு முன்பு பனங்கற்கண்டு உற்பத்திக்காக மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட பதனீர் கூப்பனி(பாகு) குடுவையிலிருந்து, தற்போது பனங்கற்கண்டு தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 15 லட்சம் பனைமரங்கள் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைமரத் தொழில் விவசாயத்துடன் தொடர்புடைய முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பனை மரம் தொழில் மற்றும் பனைமரம் சார்ந்த உபதொழில் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் கன்னிராஜபுரம், நரிப்பையூர், காவாகுளம் முதல் சிக்கல் வரையிலான சாயல்குடி பகுதிகள். திருப்புல்லானி,ரெகுநாதபுரம், தாமரைகுளம் உள்ளிட்ட ராமநாதபுரம் பகுதிகள், ராமேஸ்வரம் தீவு பகுதிகள் மற்றும் தொண்டி வரையிலும் உள்ள மாவட்டத்தின் பரவலான பகுதிகளில் இத்தொழில் சிறப்பாக நடந்து வருகிறது.கடந்த காலங்களில் பருவமழை பெய்து, நெல் அறுவடை செய்யும் சமயங்களில் முதல் வேலையாக கருப்பட்டி தயாரிப்பிற்காக பனை மரத்தின் பதநீருக்காக பாளை வெட்ட துவங்குவது வழக்கம். ஆனால் கடந்த 2019க்கு முந்தைய 5 ஆண்டுகளில் வறட்சியால் சீசன் நிலை மாறி, பனைமரத்தொழில் நலிவடைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை நன்றாக பெய்தது. தை மாதம் முதல் ஆவணி மாதம் வரை சீசன் என்பதால் இந்தாண்டு பனை மரத்தில் பதநீர் உற்பத்தி அதிகரித்தது. கடந்த 41 நாட்களுக்கு முன்பு பனங்கற்கண்டு உற்பத்திக்காக மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பதநீர் டிரம்மிலிருந்து(குடுவை), பனங்கற்கண்டு தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பிற்கும் மருத்துவ குணம் வாய்ந்த உணவு பொருள் என்பதால் பால், டீ, காபி, சுக்கு டீ யில் கலந்து குடிப்பதற்கும், குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடும் பொருளாக இருக்கிறது. மேலும் உணவு பொருட்கள், மிட்டாய்கள், சாக்லெட், சாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்பிலும் பயன்பாடு உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் பனங்கற்கண்டு வரவேற்பு உள்ளது.நரிப்பையூர் பனைமர தொழிலாளர்கள் கூறும்போது, மருத்துவ குணம் வாய்ந்ததால் பனங்கற்கண்டு தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போகிறது. பனங்கற்கண்டு தயாரிப்பிற்கேற்ற பதநீர் கிடைப்பது உகந்த மாதம் ஆவணி மற்றும் புரட்டாசி மாதம் மட்டுமே. இந்த மாதங்களில் மேற்கு தொடர்ச்சி மலை காற்று சீசன் என்பதால் இப்பகுதியில் கூடுதலான இனிப்புடன் கூடிய சுவையான பதநீர் உற்பத்தியாகும். 3 கிலோ அளவு பனங்கற்கண்டு தயாரிப்பிற்கு சுமார் 60 லிட்டர் பதநீரை அண்டாவில் சுண்டக் காய்ச்சி கூப்பனியை(பாகு)பதப்படுத்தி, மண்பானை மற்றும் தகர டிரம்மில் வைத்து காற்று செல்லாத அளவிற்கு மண்ணிற்குள் புதைத்து வைத்து விடுவோம். பிறகு 41 நாட்கள் கழித்து வெளியே எடுப்பது வழக்கம். கடந்த மாதங்களில் புதைக்கப்பட்ட டிரம், தற்போது வெளியே எடுத்து, அதனை பிரித்து சுத்தப்படுத்தி, தண்ணீரை கொண்டு கழுவி வெயிலில் உலர வைத்து, பனங்கற்கண்டு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதனை டைமன்ட் கற்கண்டு, தூள் கற்கண்டு, பவுடர் கற்கண்டு என 3 வகையாக பிரிக்கப்படுகிறது.கிலோ ஒன்றிற்கு ரூ.1000,1200 முதல் 1500 வரையிலும் விற்கப்படுகிறது. சில்லரை வியாபாரிகள், சூப்பர் மார்க்கெட் போன்ற வணிக நிறுவனங்களுக்கு வாடிக்கையாக கொடுக்கப்படுகிறது. மதுரை, கீழக்கரை, விருதுநகர்,தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட நகர பகுதி வியாபாரிகள் வாங்கிச் சென்று அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.சளி,இருமலுக்கு சிறந்த மருத்துவ பொருள் என்பதால் கொரோனா காலத்தில் சிறிய கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால் இந்தாண்டு காலநிலை மாற்றத்தால் சுவையான பதநீர் உற்பத்தி குறைவு, இதனால் பனங்கற்கண்டு உற்பத்தி குறைந்து மவுசு ஏற்பட்டுள்ளது என்றனர்.அரசு உதவ வேண்டும்பனங்கற்கண்டு தயாரிப்பிற்கு மகளிர் குழுக்கள் மற்றும் தொழிலாளர் குடும்ப பெண்களுக்கு உதவி தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கி, உற்பத்தி பொருட்களுக்கு சந்தை படுத்துதல் செய்து வருவாய் ஈட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை சீவுதல் பணிக்கு தேவையான உபயோக பொருட்கள், உதவும் இயந்திரம், கற்கண்டு தயாரிக்க உதவும் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை தொழிலாளர்களுக்கு மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வெளிநாடுகளுக்கு பறக்கும் சாயல்குடி பனங்கற்கண்டு: கிலோ ரூ.1500 வரை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ialkudi ,Chayalkudi ,Padaneer Coupani ,Baku ,Dinakaraan ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற இரண்டு டன் பீடி இலைகள் பறிமுதல்