×

ரெய்டு பீதியில் இருக்கும் மாங்கனி இலைக்கட்சியினரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘காவல்நிலைய அதிகாரிகள் இடமாற்ற விஷயத்தில் புகைச்சலாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் சமீபத்தில் காவல்துறை இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் போட்டதில், தாமரை எம்எல்ஏக்கள், ஜக்கு எம்எல்ஏக்களிடையே மோதலாம். என் தொகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் என்னுடைய பரிந்துரைப்படிதானே அதிகாரிகளை நியமிக்க வேண்டும். நான் உங்களிடம் கொடுத்த பட்டியலில் இல்லாதவர்களையெல்லாம் என் எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில் அதிகாரிகளாக நியமித்தால் என்னை எப்படி மதிப்பார்கள் என உள்துறை அமைச்சர் சிவமானவரிடம் போர்க்கொடி உயர்த்தினார்களாம். நான் இதில் எந்தளவுக்கும் தலையிடவில்லை. காவல்துறை இயக்குனர்தான் இடமாற்றல் உத்தரவை போட்டார் என கூறினாராம். ஆனால் இதனை நம்பாத எம்எல்ஏக்கள் அமைச்சர் மூலம் நேரடியாக இயக்குனருக்கு போன் போட்டு, ‘நான் கொடுத்த பட்டியலில் ஒருநபர் கூட போடாமல் வேறு ஒருவரை எப்படி நியமிக்கலாம்’ என கேட்டாராம். அதற்கு, ‘எல்லாம் உள்துறை பரிந்துரைப்படிதான் போட்டிருக்கிறோம்’ என கூறினாராம். இதில் ஆத்திரமடைந்த அவர், இடமாற்றம், புரோமோஷனில் ஊழல் நடந்துவிட்டதாக அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்று சிக்கலை ஏற்படுத்தி வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘எங்க தூக்கிப் போட்டாலும் கோலோச்சுறாராமே சார்பதிவாளர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை பெ.நா.பாளையத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம், ஊழல் தலைவிரிச்சு ஆடுவதாக புகார் எழுந்தது. பத்திரப்பதிவு, திருத்தம், உயில் பதிவு, திருமண பதிவு, சொத்து தானம் என எல்லா பதிவுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து, வெளுத்து வாங்கியதாக மேலிடத்துக்கு புகார் மனுக்கள் பறந்தன. இதன் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில், இங்குள்ள சார் பதிவாளர்தான் அத்தனைக்கும் காரணம் என தெரியவந்தது. இதையடுத்து அவர் சமீபத்தில், சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள அவினாசி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கே சென்ற பிறகும், அந்த அதிகாரி தனது ஆட்டத்தை நிறுத்தவில்லையாம். பழைய பாணி அப்படியே இங்கேயும் தொடர்கிறதாம். இன்னும் சொல்லப்போனால், பழைய இடத்தில் நடந்த பத்திரப்பதிவுகளைவிட இங்கேதான் கூடுதலாக பத்திரப்பதிவு நடக்கிறதாம். அதனால், இவரது காட்டில் ஒரே பணமழையாம். அதுவும் தீபாவளி நேரத்தில ஒரே கொண்டாட்டத்தில் திளைக்கிறாராம். கொடுக்கிற தெய்வம் பிய்ச்சுகிட்டு கொடுக்கும்… என்பார்களே அது இதுதானோ என்கிறார்கள் சக சார் பதிவாளர்கள். இவர், ஆளுக்கு தகுந்தமாதிரியும், சூழ்நிலைக்கு தகுந்தமாதிரியும் நடிப்பதில் படு கில்லாடியாம்… அன்றாடம் பண மூட்டைகளை அள்ளிச்செல்லும் இந்த அதிகாரி, நான் எங்கே சென்றாலும் ராஜாதான் என கெத்து காட்டுகிறாராம்’’ என்றார். ‘‘ரெய்டு பீதியில் மாங்கனி இலைக்கட்சியினர் இருக்கிற மாதிரி தெரியுதே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகர ரிஜிஸ்டர் ஆபிசுல உதவியாளராக பணியாற்றி வந்தவர் வீட்டில கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜிலென்ஸ் ரெய்டு நடத்தினாங்க. அதில் அதிமுக விவிஐபிக்களுக்கு பல இடங்களை வாங்கி ரிஜிஸ்டர் செஞ்சு கொடுத்தது தொடர்பா ஆவணங்கள் கிடச்சுதாம். அதுமட்டுமில்லாம இவரும் 20க்கும் மேற்பட்ட இடங்கள்ல மனைவி பெயர்ல இடத்தை வாங்கி ரிஜிஸ்டர் பண்ணிட்டாராம். தான் சேர்த்த பணத்தை பாதுகாக்க, பல வங்கிகளில கணக்கு வச்சுருக்கறதும் தெரியவந்துருக்காம். இதையும் தனியாக போய் விசாரிக்க விஜிலென்ஸ் முடிவு செஞ்சிருக்காங்க. அதுமட்டுமில்லாம இலைக்கட்சி விஐபிக்கு இவர் பினாமியா இருக்காரான்னும் விஜிலென்ஸ் விசாரிக்கத் தொடங்கிட்டாங்களாம். இவருடன் தொடர்பில் இருந்த இலைக்கட்சி விஐபிக்கள் பலர் இப்போ தங்களையும் விஜிலென்ஸ் விசாரிக்க வருமோ நம்மளையும் பிடிச்சுடுவாங்களோன்னு பீதியில இருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘அரசியல் பேசி அதிர வைத்தாராமே கவர்னர்..’’ ‘‘குமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெலங்கானா ஆளுநர், மோடியையும், ஒன்றிய அரசையும் உயர்த்திபிடித்து பேச பெரும்பாடுபட்டார். கூடவே ஆளுநர் அரசியல் பேசலாமா என்று என்னை கேள்வி கேட்கின்றனர் என்று கேட்டவாறே அவர் பேசியது முழுக்க முழுக்க அரசியல் பேச்சு. அரசியல்வாதி பொதுமேடையில் பேசுவது போல கவர்னர் பேசலாமா என அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர்.  ‘‘ சேலத்துக்காரரை நம்ப வைக்க சொந்த மாவட்டத்தில் கோயில் ேகாயிலாக படியேறுகிறாராமே மாஜி அமைச்சர்’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் தற்போது சேலத்துக்காரர் அணியில் இருந்து வருகிறார். மாஜி அமைச்சர் அடிக்கடி டபுள் கேம் ஆடி வருவதால், அவர் மீது இருந்த துளியளவு நம்பிக்கையும் சேலத்துக்காரருக்கு போய் விட்டதாம். இதையறிந்த மாஜி அமைச்சர், தனது மாவட்டத்தில் உள்ள கிராம கோயில் முதல் அனைத்து கோயில்களுக்கும் தினமும் சென்று வருகிறாராம். அவ்வப்போது, சிறப்பு பூஜையும் செய்கிறாராம். தன்னை மீண்டும் சேலத்துக்காரர் நம்ப வேண்டும் என்பதற்காக, தனது சொந்த மாவட்டத்தில் சேலத்துக்காரர் அணியில் உள்ள தொண்டர்கள், நிர்வாகிகள் வீட்டில் நடைபெறும் அனைத்து விசேஷங்களிலும் தவறாமல் கலந்து கொள்கிறாராம். ஆனாலும், மாஜி அமைச்சர் மீது சேலத்துக்காரர் டீம் ஒரு கண் வைத்துள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா….

The post ரெய்டு பீதியில் இருக்கும் மாங்கனி இலைக்கட்சியினரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : raidu ,Peter ,Puducherry ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...