×

மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ஒரு வாரத்தில் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை: மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் இன்னும் ஒரு வாரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான ரசீதுகள் வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். சென்னை ராயபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கூட்டுறவு வங்கிகளின் தலைவர் பெரம்பூர் மகேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் பெரியசாமி மற்றும் சேகர்பாபு கலந்துகொண்டு, புதிய கிளை கட்டிடத்தை திறந்து வைத்தனர்.பின்னர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுக்கான காசோலை மற்றும் மாற்றுத்திறனாளி  கடனுக்கான காசோலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினர்.தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது: நெருக்கடியான பகுதியில் கூட்டுறவு வங்கி ஏற்படுத்தப்பட்டிருப்பது, இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு வகையான பயன்பாட்டை தரும். சுய உதவிக் குழு கடன் ரத்து சம்பந்தமான கணக்கீடு நடந்து கொண்டிருக்கிறது. தீபாவளி முடிந்தவுடன் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சார்ந்த திட்டங்களுக்கு தான் முதல் உரிமை கொடுத்திருக்கிறார். சுய உதவிக்குழு கடன் மட்டும் அல்லாமல், பெண்கள் எந்தவிதமான கடன் கேட்டு வந்தாலும், உதவுவதற்கு மத்திய கூட்டுறவு வங்கி தயாராக இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பதவி ஏற்ற முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே ரூ.2750 கோடி மகளிர் சுய உதவிக்குழு கடனை தள்ளுபடி செய்து, பல லட்சம் மகளிர் பயன்பெற செய்துள்ளார். சுய உதவிக்குழு கடனுக்கான ரசீதுகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் அந்த பணிகள் முடிந்து எப்படி நகை கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதோ, அதேபோல் சுயஉதவி குழுக்களுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அந்த ரசீது வழங்கப்படும். இதில், 99.5% பேர் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. தகுதி வாய்ந்த பயனாளி யார் வேண்டுமென்றாலும் வந்து அதற்கான பயனை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். மேலும், மாநில அரசின் திட்டங்களை ஒன்றிய அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகிறார்களே என்ற கேள்விக்கு, மாநில அரசு சிறப்பாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. யார் வேண்டுமென்றாலும் வந்து ஆய்வு செய்து கொள்ளட்டும் என்றார். நிகழ்ச்சியில், கூட்டுறவு வங்கி தலைவர் பெரம்பூர் மகேஷ், ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வடசென்னை மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா, மேலாண் இயக்குனர் அமலதாஸ் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பயனாளிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்….

The post மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ஒரு வாரத்தில் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,I. Periyasamy ,Chennai ,I.Periyaswamy ,Dinakaran ,
× RELATED அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாளை...