×

2024 மக்களவை தேர்தலை குறிவைத்து பொதுத்துறை நிறுவனங்களில் காலியிடங்கள் நிரப்ப உத்தரவு: ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்களின் தகவல்களை எடுத்து அதை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் இமாச்சல், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் வரும் 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் பல்வேறு சலுகைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஒன்றிய பாஜ அரசு இறங்கி உள்ளது. இதற்கிடையே, நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மார்ச் 1, 2020 நிலவரப்படி, பல்வேறு ஒன்றிய அரசுத் துறைகளில் சுமார் 8.72  லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்கம்  நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்களின் தகவல்களை எடுத்து  அதை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நாட்டில் வேலையின்மையைக் குறைக்கும் நோக்கத்துடன் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் ஆரம்ப நிலை மற்றும் மூத்த நிலைகளில் உள்ள காலியிடங்கள் குறித்து அரசாங்கத்தால் தகவல் கோரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் வரை அடையாளம் காணப்பட்ட ஆரம்ப நிலை காலியிடங்கள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட்-செப்டம்பருக்குள் நிரப்பப்பட வேண்டும். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கு முன்பாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்’ என்று தெரிவித்தார்.  2021ன் இறுதியில் நாட்டில் 255  பொதுத்துறை நிறுவனங்கள்  செயல்பட்டு வருகின்றன.  இதில், 177 நிறுவனங்கள்  லாபம் ஈட்டுகின்றன. 2021ம்  நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.1.89 லட்சம் கோடி லாபம்  ஈட்டியுள்ளன. ரயில்வேயில் கிட்டத்தட்ட 2.3 லட்சம் பணியிடங்கள் காலியாக  உள்ளன. நாடு முழுவதும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என கடந்த ஜூனில் பிரதமர் மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது….

The post 2024 மக்களவை தேர்தலை குறிவைத்து பொதுத்துறை நிறுவனங்களில் காலியிடங்கள் நிரப்ப உத்தரவு: ஒன்றிய அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : PSUs ,2024 Lok Sabha elections ,Union ,New Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED 2024 மக்களவைத் தேர்தல்.. அரசின்...