×

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் - விமர்சனம்

தன் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, அசோக்கை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார் சாய் பிரியங்கா ரூத். உள்ளூர் போதை மருந்து கடத்தல் தாதா வேலு பிரபாகரன் குரூப்பில் பணிபுரிகிறார், அசோக். அவரை ஒரு முக்கிய பணிக்காக மும்பைக்கு அனுப்புகிறார், வேலு பிரபாகரன். திரும்பி வரும்போது, வீட்டு வாசலிலேயே என்கவுன்டர் செய்யப் படுகிறார் அசோக். அதற்குப் பின்னால் வேலு பிரபாகரனின் சதியும், அவரது இளைய மகனின் பெண்பித்தும் மறைந்து இருக்கிறது. அதை வேலு பிரபாகரனின் மேனேஜர் ஈ.ராமதாஸ் மூலம் அறிந்துகொள்ளும் சாய் பிரியங்கா ரூத், பிறகு சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்க துணிச்சலுடன் புறப்படுகிறார். கணவனை அநியாயமாக கொன்றவர்களை, எப்படி பழிவாங்குகிறார் என்பது மீதி கதை.

இது வழக்கமான கேங்ஸ்டர் கதை என்றாலும். சாய் பிரியங்கா ரூத்தின் ஆவேசமும், வேகமும், நடிப் பும்  படத்துக்கு தனித்தன்மையை கொடுத்து இருக்கிறது. கேங்ஸ்டர்களுக்கு இடையே ஏற்படுகின்ற மோதலை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி காய்நகர்த்துவதும், சரியான நேரத்தில் பாய்ந்து பழிவாங்குவதுமான திரைக்கதை, படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. அவர் பத்து பேரை அடித்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு தோற்றமும், நடிப்பும் பொருத்தமாக இருக்கிறது. பெரிய மனுஷன் என்ற போர்வையில் போதை மருந்துகள் கடத்தும் கச்சிதமான வில்லன், வேலு பிரபாகரன்.

தனக்கு துரோகம் செய்த ஈ.ராமதாசிடம், ‘எனக்கு சிரமம் கொடுக்காம, நீயே உன் முடிவை தேடிக்க’ என்று அவரை வீட்டில் இறக்கிவிட்டு செல்வது, ஒரு சோறு பதம். டேனியல் பாலாஜி இதுபோன்ற ரோலில் நிறைய படங்களில் நடித்துஇருப்பதால், இதில் நத்திங் ஸ்பெஷல். சாய் பிரியங்கா ரூத்தின் கணவனாக வரும் அசோக், சில காட்சிகளில்   வந்தாலும் மனதில் நிற்கிறார். ஆடுகளம் நரேன் வழக்கமான போலீஸ் அதிகாரி. ‘பாவம் அந்த பொண்ணு. நிறைய வலியை பார்த்துட்டா. வலிக்காம ஒரே ஒரு புல்லட்டை மட்டும் யூஸ் பண்ணுங்க’ என்று, சக போலீசிடம் யதார்த்தமாக சொல்வது நறுக்கென்று இருக்கிறது. கேங்ஸ்டர்கள் பற்றிய படம் என்றால், என்னென்ன காட்சிகள் எப்படி எல்லாம் இருக்குமோ, அவை எல்லாம் அப்படியே இருக்கிறது. காட்சிக்குக் காட்சி ரத்தம் தெறிக்கிறது.

பின்னணி இசை படத்தை மேலும் விறுவிறுப்பாக்குகிறது. கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவு, அன்டர் கிரவுண்ட் உலகத்தை, அதன் இயல்பான நிறத்தில் படம் பிடித்துக் காட்டியுள்ளது. குரோதம், துரோகம் நிறைந்த இன்னொரு உலகில் இருந்துவிட்டு வந்த பிரமையை ஏற்படுத்துகிறார், இயக்குனர் சி.வி.குமார். என்னதான் கேங்ஸ்டர்களின் கதை என்றாலும், படம் முழுவதும் ரத்த ஆறு ஓட வேண்டுமா? மும்பையில் சில வாரம் துப்பாக்கி பயிற்சி எடுத்துவிட்டால், ஒரு பெண், ஒரு கேங்ஸ்டர் கூட்டத்தையே அழித்துவிட முடியுமா? படத்தில் வரும் வில்லன்களில் பெரும்பாலானோர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக சித்தரித்து இருப்பது சரியா? இதுபோன்ற சில குறைகளில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

Tags : Gangs ,
× RELATED விஐபிக்காக குற்றவாளிகள் குண்டர்...