×

திருச்சி அருகே பசுபதீஸ்வரர் கோயிலில் சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

முசிறி: திருச்சி அல்லூரில் பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த  கோயில் முதல் பாராந்தக சோழர் ஆட்சி காலத்தில் (பொதுகாலம் 924)  கட்டப்பட்டது. இங்கிருந்து அரசின் கல்வெட்டு துறையால் 15 கல்வெட்டுகள் 1903  படி எடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பாடங்களை  சரிபார்க்கவும், கட்டிடக்கலை நுட்பங்களை அறியவும் திருச்சி தனியார் கல்லூரி  வரலாற்றுத்துறை தலைவர் நளினி, முசிறி அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்று  துறை உதவி பேராசிரியர் அகிலா ஆகியோர் முயற்சி மேற்கொண்டபோது புதிய  கல்வெட்டு ஒன்றையும், ஏற்கனவே படி எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றின்  விட்டுப்போன பகுதியையும் கண்டறிந்துள்ளனர்.இதுகுறித்து வரலாற்று ஆய்வு  மைய இயக்குனர் கலைக்கோவன் கூறியதாவது: பசுபதீஸ்வரர் கோயில் கட்டப்பட்ட  காலத்தில் இறையகம், அதன் முன் ஒரு மண்டபம் என இரு கட்டுமானங்கள் இருந்தன.  தற்போது தெற்கிலும் வடக்கிலும் கற்சுவர்கள் அமைத்து மண்டபத்தை இறையகத்துடன்  இணைத்துள்ளனர். இது பல்லவர்கால பழமையானது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்,  மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் இம்மரபு பின்பற்றப்பட்டுள்ளது. முற்சோழர்  காலத்தில் இம்மரபின் தொடர்ச்சியாக இறையகங்களின் முன் தனி மண்டபங்கள்  அமைக்கப்பட்டது இந்த புதிய கல்வெட்டால் தெரியவருகிறது. அல்லூரில் 1,000  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வீரநாராயணபுரத்து வணிகரான முனைச்சுடர்  விரையாச்சிலை இக்கட்டுமானத்தை எழுப்பியுள்ளார். மண்டபத்தின் வடமேற்கு  சுவர்களில் உள்ள மற்றொரு கல்வெட்டு வேளிர் அரசர் ஒற்றி மதுராந்தகன் அல்லூர் ஊராருக்கு அனுப்பிய அரசு ஆனையாக அமைந்துள்ளது. மண்டபத்தை கட்டிய முனைசுடர் விரையாச்சிலை, இறைவனுக்கு தேவியாக உமையன்னையின் செப்பு திருமேனியை  கோயிலில் எழுந்தருளிவித்தார். இறைவிக்கான வழிபாடு, படையல்களுக்காக அவர் விலைக்கு பெற்று கோயிலுக்கு அளித்த தோட்ட நிலத்தின் எல்லைகளை வரையறுத்து அதன் மீதான வரிகளை நீக்கும்படி ஊராட்சி அலுவலர்களுக்கு அரசாணை அறிவுறுத்தியது. மன்னரின் ஆணையுடன் வந்த இந்த ஓலையை ஊரால் எப்படி வரவேற்று படித்து அதன் உள்ளீட்டை நிறைவேற்றினர் என்பதையும் இக்கல்வெட்டால் அறிய  முடிகிறது என்றார்….

The post திருச்சி அருகே பசுபதீஸ்வரர் கோயிலில் சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Chola ,Pasupadeeswarar Temple ,Trichy ,Trichy Allur ,Barantaka ,Dinakaran ,
× RELATED பசுபதீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை